வயது கடந்தாலும் காதல் குறையாது என்பதற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் 71 வயது மார்ட்டின் தாமஸ் 64 வயது எலிசபெத் மேரி இணையர்.
கடந்த 43 ஆண்டுகளாகத் திருமண வாழ்வில் களித்திருக்கும் இந்தத் தம்பதி, தங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
திரு மேரியை முதன்முறையாக உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கண்ட திரு தாமஸ், அப்போதே அவர்தான் தம் வாழ்க்கைத்துணைவியாக வரவேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் பதித்துக்கொண்டார்.
அவ்விருப்பத்தைத் தம் சகோதரியிடம் தெரிவித்த தாமஸ், பெற்றோரின் இசைவுடன் மேரியைக் கைபிடித்தார்.
“பெற்றோர் எனக்குப் பல பெண்களை அறிமுகம் செய்தனர். ஆனால், எவர்மீதும் எனக்கு ஈர்ப்பு வரவில்லை. எலிசபெத் மேரியைப் பார்த்தவுடன், ‘ஒருவேளை இவர்தான் என் மனைவியாக வருவாரோ’ என்று என்னுள் தோன்றியது,” என நகைத்தவாறே கூறினார் திரு தாமஸ்.
திருமண வாழ்வில் இணைந்ததிலிருந்து அன்பர் தினத்தைப் பெரிதாகக் கொண்டாடியதில்லை என்ற போதிலும் இந்த இணையருக்கு ஒவ்வொருநாளும் அன்பர் தினம்தான்.
அண்மையில் மார்சிலிங் துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தில் மற்ற இணையர்களுடன் அன்பர் தினக் கொண்டாட்டத்தில் இத்தம்பதியர் கலந்துகொண்டனர்.
இவர்களைப் பொறுத்தவரை, காதலர்களுக்கு என தனிப்பட்ட முறையில் ஒருநாளில் அன்பைப் பரிமாறிக் கொண்டாடுவதற்குப் பதிலாக எப்போதும் அந்த நெருக்கத்துடன் வாழ்க்கையைக் கடந்து செல்வதுதான் அன்பின் உன்னதம் எனக் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
திருமண வாழ்வு எவ்வளவு கரடுமுரடாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதைத் தங்களின் மூன்று மகள்களுக்கும் அப்பாற்பட்டு, பலருக்கும் எடுத்துச் சொல்லும் வகையில் வாழும் எடுத்துக்காட்டாக இவர்கள் திகழ்கின்றனர்.
“அவர் கொஞ்சம் கோபக்காரர். சண்டை வந்தால் நான் அமைதியாக இருந்து, விட்டுக்கொடுத்து விடுவேன். இருவரும் சில நேரங்களில் பேசாமல் இருப்போம். ஆனால், அந்தச் சிறு நேரம் பேசாமல் இருப்பதுகூட எங்களுக்கு ஏக்கத்தை அளிக்கும். பின்னர் இருவரும் பேசிக்கொள்வோம்,” என்றார் திருவாட்டி மேரி.
திருமண வாழ்வு நீடித்து நிலைக்க, கணவன் - மனைவிக்கு இடையே சண்டை எழும்போது, இருவரும் பொறுமை காக்கவேண்டும் என்பதே இவர்களின் தாரக மந்திரம்.
ஒருவரையொருவர் கேலி செய்துகொண்டு முதுமைக் காலத்திலும் இளமைத் துள்ளலுடன் காணப்படும் இந்த இணையர், தங்களின் 30வது திருமண ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மனத்தில் இன்னும் பசுமையாக இருப்பதாகக் கூறினர்.
குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குச் சொகுசுக் கப்பலில் பயணம் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட இவர்கள், இதுவரை தாங்கள் கொண்டாடியவற்றில் அதுவே மறக்கமுடியாத திருமண நாள் என்றனர்.
நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தும் இவ்விணையருக்கு, ஒன்றாகப் படங்கள் பார்ப்பது, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில் பேரார்வம்.
“நேப்பாளம், ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளோம். எங்கள் இளைய மகள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால் அங்கு அடிக்கடி சென்று வருவோம். குடும்பமாக மீண்டும் நேப்பாளம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் திரு தாமஸ்.
அன்பர் தினம் என்றாலே பெண்களைப் பெரிதும் கவரும் பரிசுப்பொருள் பூங்கொத்தாகத்தான் இருக்கும். ஆனால், அதை விரும்பாத தம் மனைவிக்குத் தங்க வளையல், மோதிரம் போன்ற பரிசுகளை அளித்து மனங்கவர்ந்துள்ளார் திரு தாமஸ்.
மனைவியின் பரிவுகாட்டும் உள்ளம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்ற திரு தாமஸ், சென்ற ஆண்டு புற்றுநோயால் தாம் அவதியுற்றபோது அவர் தம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்ததை உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.