சுகாதார அமைச்சின் 2025 நிதியாண்டிற்கான செயல்பாட்டுச் செலவினம், முந்திய கணிப்புகளைவிட $310 மில்லியன் குறைக்கப்பட்ட போதிலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறியுள்ளார்.
புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
செலவினம் குறைந்ததற்குக் காரணம்
பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களின் செயல்பாட்டுச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட குறைவாக அதிகரித்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று திருவாட்டி ரஹாயு விளக்கினார்.
வேகமாக மூப்படைந்துவரும் மக்கள்தொகையின் தேவைகளைக் கருத்தில்கொள்ளும்போது, செலவினங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறைந்ததற்கான காரணம் குறித்து திரு கியாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அடுத்த நிதியாண்டிற்கான தனது வரவுசெலவைக் கணிக்கும்போது, 2025 நிதியாண்டிற்கான செயல்பாட்டுச் செலவின மதிப்பீட்டை $18.49 பில்லியனாக சுகாதார அமைச்சு குறைத்துள்ளது.
இது ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட $18.8 பில்லியனைவிட $310 மில்லியன் குறைவு.
இந்த 1.6 விழுக்காட்டுச் சரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவுசெலவு மாற்ற வரம்புக்குள் உள்ளது.
செலவினம் ஏறுமுகம்
செலவினம் குறைந்திருந்தாலும், அமைச்சின் ஒட்டுமொத்தச் செலவினம் வரும் ஆண்டுகளில் ஏறுமுகத்திலேயே இருக்கும் என்று திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2024 நிதியாண்டின் உண்மையான செலவினத்துடன் ஒப்பிடுகையில், 2025க்கான மதிப்பீடு $1.63 பில்லியன் (9.7 விழுக்காடு) அதிகம். அதன் பொருட்டு, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
“2026 நிதியாண்டிற்கான செயல்பாட்டுச் செலவினம் $20.04 பில்லியன் என்ற கணிப்பின்படி, செலவினம் உயர்ந்துவரும் போக்கு தொடரும்,” என்றார் அவர்.

