தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது’

3 mins read
4a54aa8e-93ec-4301-8582-218878f3ebce
விருதளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் எட்வின் டோங். - படம்: சாவ் பாவ்

சிங்­கப்­பூ­ரின் மர­பு­டை­மை­யைப் பாது­காக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.

ரொக்கம், மதிப்புமிக்க கலைப்பொருள்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கிய தனிநபர்கள், கலாசார, பாரம்பரியக் கூறுகளை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடங்கிய சமூகப் பங்காளிகள், தொழில்முறை நிபுணத்துவம் வழங்கியோர் உள்ளிட்டோர்க்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

2006 முதல், ஒவ்வோர் ஆண்டும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு விருது பெற்றோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஆக அதிகமானோர் விருது பெற்றுள்ளனர்.

ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற விருதளிப்பு விழா, சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைப் போற்றும் வகையில் அமைந்த இசை நிகழ்ச்சியுடன் களைகட்டியது. இதில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சிங்கப்பூரர்களிடையே பாரம்பரியக் கூறுகள் குறித்து அறியும் ஆர்வம் முன்பை விட அதிகரித்துள்ளதைச் சுட்டிய அமைச்சர், சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் முன்னோர்களின் பங்களிப்புகளை அறிவது, எதிர்கால முன்னேற்றப் பாதை குறித்து சிந்திக்கவும் திட்டமிடவும் உதவும் என்றார்.

சிங்கப்பூரின் முக்கிய அடையாளமான பல்லினச் சமூகத்திலுள்ள கலாசாரங்களைப் போற்றிப் பேணும் நோக்கம் கொண்டுள்ள ‘Our SG Heritage Plan 2.0’ திட்டத்தின் நான்கு முக்கிய அங்கங்கள் குறித்து அவர் பேசினார்.

“கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் இழந்துவிட்டால் திரும்பப் பெற முடியாது,” என்று சொன்ன அவர், அவை குறித்து அடுத்தடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது அனைவரது கடமை என்றும் அதனை முக்கியப் பணியாக ஏற்று மேற்கொள்ள வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டார்.

2016 முதல் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ்மொழி விழாவுக்கு வலுவாக ஆதரவளித்து வரும் யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கு ‘மரபுடைமைத் தோழர்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.

அமைச்சரிடமிருந்து ‘மரபுடைமைத் தோழர்’ விருது பெற்ற யுவபாரதி அனைத்துலகப் பள்ளி இயக்குநர் லதா மோகன்குமார்.
அமைச்சரிடமிருந்து ‘மரபுடைமைத் தோழர்’ விருது பெற்ற யுவபாரதி அனைத்துலகப் பள்ளி இயக்குநர் லதா மோகன்குமார். - படம்: சாவ் பாவ்

சமூக மன்றங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவளித்து வருவதாகக் கூறிய அப்பள்ளி இயக்குநர் லதா மோகன்குமார், “எதிர்காலச் சந்ததியினருக்கு நமது வேர்கள் குறித்து தெரியப்படுத்துவது அவசியம். பல்லினச் சமூகமான சிங்கப்பூரில் அனைத்துப் பண்பாட்டு விழுமியங்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

“மேலும், சிங்கப்பூரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான கலாசார மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் பொறுப்பும் அவற்றை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் கடமையும் எங்களுக்கு உள்ளது,” என்றார்.

அப்பள்ளி, இந்திய மரபுடைமை நிலையத்தின் ‘என்டே வீடு’ எனும் சிறப்புக் கண்காட்சிக்கும் ஆதரவளித்துள்ளது.

அக்கண்காட்சிக்கு தனது கலைப்படைப்பில் உருவான 20 பிரத்தியேக கசவு ஆடைகளை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர் ஆடை வடிவமைப்பாளர் கவிதா துளசிதாஸ், ‘மரபுடைமையின் ஆதரவாளர்’ விருது பெற்றார்.

தந்தை வழியில் மலையாளப் பாரம்பரியம் கொண்ட இவர், பல்வேறு பாரம்பரிய, சமகாலக் கூறுகளை இணைத்து ஆடை வடிவமைப்பதன் மூலம் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் பங்காற்றி வருகிறார்.

“கலையும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்தவை. அடையாளத்தையும் சமூக உணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் இந்திய மரபுடைமை நிலையத்தில் மலையாளிகளின் சிறப்புக் கண்காட்சிக்குப் பங்களித்ததில் மகிழ்ச்சி,” என்று சொன்ன கவிதா, “ஃபேஷன் துறையில் பணியாற்றுவதன் மூலம் இளையர்களை ஈர்க்கும் வண்ணம் பாரம்பரிய ஆடைகளுக்குச் சமகால வடிவமைப்புகளை வழங்கி வருவதும் பெருமையானது,” என்றார்.

இவை சிங்கப்பூரர்களிடம் வலுவான கலாசார உணர்வுகளைக் கொண்டு சேர்ப்பதாக நம்புகிறார் கவிதா.

பழமையை நினைவுகூறும் வகையில் ஓவியம் அமைத்து ‘மரபுடைமைத் தோழர்’ விருது வென்ற அனில் சந்துரு ததானி.
பழமையை நினைவுகூறும் வகையில் ஓவியம் அமைத்து ‘மரபுடைமைத் தோழர்’ விருது வென்ற அனில் சந்துரு ததானி. - படம்: சாவ் பாவ்

பழங்கால நினைவுகளைத் தூண்டும் வண்ணம் உள்ளூர்க் கலைஞரைக் கொண்டு அரபு ஸ்திரீட்டிலுள்ள தனது கடைவீட்டுச் சுவரில் ‘Kampong Glam’s early days by the seafront’ சுவரோவியம் அமைத்துள்ள அனில் சந்துரு ததானி, ‘மரபுடைமைத் தோழர்’ விருது பெற்றார்.

“சிங்கப்பூர் நமக்கு தந்துள்ள அனைத்திற்கும் நன்றி பாராட்டும் விதமாக இந்த ஓவியத்தை அமைத்தோம். இது, நமது கலாசாரத்தின் ஒரு நிரந்தர நினைவூட்டலாக அமைந்து நம் பெருமையைப் பறைசாற்றும் என நம்புகிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்