‘டிபிஎஸ் பேலா’ கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில கடைகளில் பொருள்களை வாங்குவோருக்கு $3 வரை விலைச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அச்சலுகை வழங்கப்படும்.
அதிகபட்சம் $3 வரை ரொக்கம் திரும்பப் பெறும் (கேஷ் பேக்) இச்சலுகைஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும்.
பிஓஎஸ்பி வங்கி புதிதாகத் தொடங்கியுள்ள ‘நமது குடியிருப்பு வட்டாரங்களை ஆதரிப்போம்’ என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
சனிக்கிழமைகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கும் முதல் 75,000 பேர் $3 வரை திரும்பப் பெறுவர்.
தீவு முழுவதும் உள்ள 22,000 குடியிருப்பு வட்டாரக் கடைகளில் இச்சலுகையைப் பெறலாம்.
திட்டத்தில் பங்கேற்றுள்ள கடைகளில் வைக்கப்படும் எஸ்ஜிகியூஆர் குறியீட்டை வருடி பணம் செலுத்த வேண்டும்.
இச்சலுகை தவிர, ஷெங் சியோங் பேரங்காடிகளில் பிஓஎஸ்பி ரொக்கக் கழிவு அட்டை (டெபிட் கார்ட்) அல்லது கடன்பற்று அட்டையைப் (கிரெடிட் கார்ட்) பயன்படுத்தி முட்டை அல்லது அரிசி வாங்குவோருக்கு கூடுதலாக 3 வெள்ளி கழிவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு மாதமும் அந்தந்தப் பொருள்களை வாங்கும் முதல் 50,000 பேருக்கு அந்தக் கழிவு வழங்கப்படும். வாரத்தின் எல்லா நாளிலும் சலுகை நடப்பில் இருக்கும்.
தெக் வாய் கடைத்தொகுதியில் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற சமூக நிகழ்வு ஒன்றில் இந்தச் சலுகைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்நிகழ்வில் பங்கேற்ற துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், ரொட்டிக் கடை ஒன்றில் டிபிஎஸ் பேலா செயலியைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கினார்.
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த ‘டிபிஎஸ் 5 மில்லியன் உணவங்காடி சாப்பாடு’ திட்டத்தின் விரிவாக்கமே புதிய ‘கேஷ் பேக்’ சலுகை.
2023 பிப்ரவரி முதல் 2024 ஜூலை 26 நடப்பில் இருந்த அந்தத் திட்டத்தின்கீழ் 11,600க்கும் மேற்பட்ட உணவங்காடி நிலையங்களில் டிபிஎஸ் பேலா செயலியைப் பயன்படுத்தி சாப்பாடு வாங்கியோருக்கு $3 வரை கழிவு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 100,000 பேர் வரை அந்த விலைக் கழிவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தத் திட்டத்தின்கீழ் எட்டு மில்லியன் சாப்பாடுகளுக்கு மானியம் வழங்கியதாக பிஓஎஸ்பி சனிக்கிழமை கூறியது. டிபிஎஸ் குழுமத்தின் ஓர் அங்கம் பிஓஎஸ்பி வங்கி என்பது தெரிந்ததே.