9,822 வாக்காளர்களுக்கு 2 வாக்கு அட்டைகளைத் தவறுதலாக அனுப்பியது தேர்தல் துறை

2 mins read
8fa0217c-bd25-4918-9245-b342b6f9c9cb
வெவ்வேறு வாக்காளர் வரிசை எண் கொண்ட இரு வாக்கு அட்டைகளை 9,354 வாக்காளர்களும், ஒரே தகவலைக் கொண்ட இரு அட்டைகளை 468 வாக்காளர்களும் பெற்றனர்.  - படம்: சிஎன்ஏ வாசகர்

தஞ்சோங் பகார் வட்டாரத்தில் இருக்கும் 4,800க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தவறுதலாக இரண்டு வாக்கு அட்டைகள் அனுப்பப்பட்டன எனத் தேர்தல் துறை தெரிவித்தது.

வாக்கு அட்டைகளை அச்சிட்ட ‘டோப்பன்’ அச்சுப் பதிப்பு நிறுவனம் சோதனைப் பிரதியையும் சரியான வாக்கு அட்டைகளையும் தவறுதலாகச் சேர்த்து அனுப்பி விட்டதாக ஆணையம் வியாழக்கிழமை விடுத்த அறிவிப்பில் கூறியது.

வெவ்வேறு வாக்காளர் வரிசை எண் கொண்ட இரு வாக்கு அட்டைகளை 9,354 வாக்காளர்களும், ஒரே தகவலைக் கொண்ட இரு வாக்கு அட்டைகளை 468 வாக்காளர்களும் பெற்றனர்.

மொத்தமாக 4,803 குடியிருப்புகளைச் சேர்ந்த 9,822 வாக்காளர்களுக்குத் தவறுதலாக இரு வாக்கு அட்டைகள் அனுப்பப்பட்டதாக தேர்தல் துறை கூறியது.

செயிண்ட் மார்கரெட் பள்ளி, தங்ளின் சமூக நிலையம், ஃபோர் பார்க் தொடக்கப்பள்ளி, டெல்டா விளையாட்டு அரங்கம் ஆகியவை பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஆகும்.

சரியான வரிசை எண்ணை பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் துறை தெரியப்படுத்தி வருகிறது.

வாக்காளர்களின் அடையாள அட்டைகள் வாக்களிப்பு நிலையங்களில் இருக்கும்  தேர்தல் பதிவேட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். எனவே, வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டையை வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

‘சிங்பாசில்’ இருக்கும் மின்வாக்கு அட்டையிலிருந்து வாக்காளர்கள் தங்களின் சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் உதவித் தேவைப்படுவோர் 1800-225-5353 என்னும் எண்ணை அழைக்கலாம் எனவும் ஆணையம் கூறியது.

நடந்த தவறுக்காகத் தேர்தல் துறை பாதிக்கப்பட்ட வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்