தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதுமையில் நிம்மதி தரும் திட்டமிடப்பட்ட ஓய்வுக்காலம்

3 mins read
a9200700-7db2-43fe-984f-3be408a0a03e
குடிமைத் தற்காப்புப் படையில் கற்றுக்கொண்ட ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல், செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகிய திறன்கள் தமது வெற்றிக்கு முக்கியமானவை என்று ஆர்.ஆர்.எஸ். தியாகராஜன் கூறினார். - படம்: சிஓஎஸ்இஎம்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் மூத்த அதிகாரியாக 34 ஆண்டுகள் பணியாற்றி, வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஆர்.ஆர்.எஸ். தியாகராஜன், தமக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் பணி ஒன்றில் சேர்ந்தார். 

‘சிஓஎஸ்இஎம்’ (COSEM) பாதுகாப்பு நிறுவனத்தில் அவர் மேற்கொண்டுள்ள ஆலோசகர் பணி, அவருக்குச் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

சிங்கப்பூரில் 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 49.1 விழுக்காட்டினர் என்று மனிதவள அமைச்சின் பொருளியல் நிபுணர்கள் பங்கேற்ற ஆக அண்மைய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. ஒய்வுபெறும் வயதை நெருங்கும் தருவாயில் மூத்த ஊழியர்கள் பலர், மற்றொரு வேலையில் சேர தங்களை மனத்தளவில் தயார்படுத்தி வருவதாக அந்த ஆய்வு சுட்டுகிறது.

சிங்கப்பூரர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது தற்போது 63 வயதாக உள்ளது. அது 2026ல் 64ஆகவும் 2030ல் 65ஆகவும் உயரும்.

மூத்த ஊழியர்களின் ஆற்றலுக்குத் தகுந்தபடி வேலைகளை மாற்றியமைத்தல், நீக்குப்போக்கான வேலை நேரம், வயது அடிப்படையிலான பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்குதல் போன்றவற்றை ஏற்படுத்த முதலாளிகளுக்கு அமைச்சு ஊக்குவிக்கிறது. திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் கற்ற திறன்களைச் செயல்படுத்துவதற்கான வசதியை ஊழியர்களுக்கு ஏற்படுத்தித்தரவும் அமைச்சு வேலையிடங்களை ஊக்குவிக்கிறது. 

அதே நேரத்தில், திறன் மேம்பாடுகுறித்து திறந்த மனத்துடன் இருக்கவும் இதுவரை செய்துவந்த வேலையிலிருந்து மாறுபட்ட வேலையைச் செய்யத் தயாராகவும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் இருக்கும்படியும் அமைச்சு ஊக்குவிக்கிறது.

சமூகச் சேவையாற்றுவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறும் திரு தியாகராஜன், ராணுவச் சேவையின்போது தமக்குள் வளர்த்துக்கொண்ட கட்டொழுங்கு, மேலாண்மைத்திறன், சுறுசுறுப்பு உள்ளிட்ட பண்புகள் இன்றளவுமே வேலையிடத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினார். 

கற்ற தொழில்நுட்பத்திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவது முக்கியம். அதே நேரத்தில், நல்ல வேலையிடப் பண்புகளை வளர்ப்பவர்கள், முதுமையிலும் அந்தப் பண்புகளுக்கான மரியாதையைப் பெறுவர் என்றும் திரு தியாகராஜன் நம்புகிறார்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் பயிற்சி அதிகாரியாக தியாகராஜன் பணியைத் தொடங்கினார். காலப்போக்கில் அவர் செயல்பாடுகள் சம்பந்தமான பணிகளை மேற்கொண்டார். 

கோஸெம் நிறுவனத்தில் அவர் அனைத்துலகப் பயிற்சி அமர்வுகளை ஒருங்கிணைக்கிறார். அனைத்துலக பங்கேற்பாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்ள, ‘பயிற்சித் தேவை பகுப்பாய்வு’ (training needs analysis) என்ற கட்டமைக்கப்பட்ட செய்முறையைக் கையாள்கிறார்.

குடிமைத் தற்காப்புப் படையில் தாம் கற்றுக்கொண்ட ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல், செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகிய திறன்கள் தமது வெற்றிக்கு முக்கியமானவை என்று தியாகராஜன் விளக்கினார்.

“ஓய்வுபெறும் காலத்தைப் பற்றி வெகுகாலத்திற்கு முன்னரே சிந்திக்கத்தொடங்க வேண்டும். நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்றார் திரு தியாகராஜன்.

தற்போதைய பொருளியல் உருமாற்றச் சூழலில், ஓய்வுபெற்ற பின்னர் புதிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதன்று. வலுவான தொடர்பு வட்டத்தை உருவாக்குவது அவசியம். ஓய்வுபெற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பது பயனளிக்கும் என்று அவர் பரிந்துரைக்கிறார். 

ஏற்கெனவே உள்ள திறன்களைத் பயன்படுத்தி புதிய பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது உதவியாக இருந்தது என்றார் அவர். 

புதிய பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு ஏற்பப் புதிய திறன்களையும் பயிற்சிகளையும் பெறத் தயாராக இருக்க வேண்டும் என்பது அவரது அனுபவ உரை.

குறிப்புச் சொற்கள்