ஜூரோங்கில் சாலையைக் கடந்துகொண்டிருந்த மாதை கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை யுவான் சிங் சாலை, டா சிங் சாலைச் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
அந்த 39 வயது மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.
SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, பாதசாரிகள் இருவர் யுவான் சிங் சாலையைக் கடப்பதைக் காட்டியது.
போக்குவரத்து விளக்கில் 'பச்சை மனிதர்' விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தபோது பேருந்துச் சேவை எண் 49 சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பியது.
அப்போது சாலையைக் கடந்துகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை அப்பேருந்து ஒட்டிச் சென்றது.
அப்பேருந்தைப் பின்தொடர்ந்த கார், அந்த மாதின் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் உடனடியாக எழுந்து நிற்க, கார் ஓட்டுநர் கதவைத் திறந்து வெளியேறுவதுடன் காணொளி முடிவுக்கு வருகிறது.
அந்தக் காணொளி, பின்னால் வந்துகொண்டிருந்த வேறொரு காரிலிருந்த கண்காணிப்புக் கருவியில் எடுக்கப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.