மத்திய விரைவுச் சாலையில் கார் மோதி பாதசாரி பலி

மத்திய விரைவுச் சாலையில் கார் மோதி பாதசாரி பலி

1 mins read
4a08cffa-f03d-46d1-9a7a-ab042363f808
ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் நடந்து சென்ற ஆடவர் கார் மோதி மாண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம் : டிக்டாக்

மத்திய விரைவுச் சாலையில் கேர்ன்ஹில் சர்க்கில் வெளிவழிக்கு அருகே நடந்து சென்ற ஆடவர் கார் மோதி உயிரிழந்தார். அவருக்கு வயது 40.

வியாழக்கிழமை நடந்த சம்வம் குறித்துக் காலை 6 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் கார் மோதியதில் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் காவல்துறை கூறியது.

காரை ஓட்டிய 35 வயது ஆடவர் விசாரணையில் ஒத்துழைப்பதாக அது குறிப்பிட்டது.

மாண்ட ஆடவர் விரைவுச்சாலைக்கு எப்படி நடந்து சென்றார் எனத் தெரியவில்லை.

சிங்கப்பூரின் அனைத்து விரைவுச்சாலைகளிலும் சுரங்கப் பாதைகளிலும் பாதசாரிகளுக்கு அனுமதி இல்லை என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டரிங்’ இணையத்தளம் தெரிவிக்கிறது.

சம்பவம் தொடர்பான காணொளியை ‘டிக்டாக்’ பயனர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில், மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப் பாதை வலப்புறத்தில் அவசர மருத்துவ உதவி வாகனம், காவல்துறை வாகனங்கள், இரண்டு வெள்ளை கார்கள் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிகிறது.

விபத்து குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து