மூன்றாவது வட்டாரத்தில் நடப்புக்கு வந்த பாதசாரிகளுக்கு உகந்த சாலைகள்

மூன்றாவது வட்டாரத்தில் நடப்புக்கு வந்த பாதசாரிகளுக்கு உகந்த சாலைகள்

2 mins read
ce55491e-dab2-4587-bf11-fa7e88148d4e
புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் அமைக்கப்பட்டுள்ள நட்பார்ந்த சாலைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சாலைகளைப் பாதசாரிகளுக்கு மேலும் உகந்தவையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அம்முயற்சிக்கு நட்பார்ந்த சாலைகள் (Friendly Streets) என்று நிலப் போக்குவரத்து ஆணையம் பெயர் சூட்டியுள்ளது. அந்த வகையில், புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டிலும் பாதசாரிகளுக்கு உகந்த சாலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட், அத்தகைய சாலைகள் அமைந்துள்ள மூன்றாவது வட்டாரமாகும்.

கடந்த ஜூலை மாதம் முதல் அங் மோ கியோவில் நட்பார்ந்த சாலைகள் அமைக்கப்பட்டன. பிறகு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் ரோட்டிலும் நட்பார்ந்த சாலைகள் நடைமுறைக்கு வந்தன.

தெம்பனிஸ், தோபாயோ ஆகியவற்றிலும் நட்பார்ந்த சாலைகளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவை 2025ஆம் ஆண்டுக்குள் கட்டங்கட்டமாக முடிவடையும்.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் ஹொங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஏமி கோர், வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) ஃபேஸ்புக்கில் இதனைத் தெரிவித்தார். அடுத்ததாக பந்து வட்டாரங்களில் நட்பார்ந்த சாலைகள் அமையவிருப்பதை முன்னிட்டு அதிகாரிகள், அவற்றில் வசிக்கும் சமூகத்தினருடன் தொடர்புகொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிடோக், புவாங்கொக், புக்கிட் பாஞ்சாங், ஹாலந்து / புவன விஸ்தா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், பெக் கியோ, பொங்கோல், செம்பாவாங், தியோங் பாரு / ஹேவ்லாக் ஆகியவை அந்தப் பத்து வட்டாரங்களாகும்.

நட்பார்ந்த சாலைகள் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படும். நடை பாதையும் சைக்கிளோட்டுவதையும் மேலும் பாதுகாப்பானவையாக ஆக்குவது, கூடுதலாக அனைவரையும் உள்ளடக்கச் செய்வது, கூடுதல் வசதியானவையாக மேம்படுத்துவது இலக்குகளாகும்.

வாகனங்கள் அதிகபட்சமாக எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பதை பச்சை சாயம் பூசப்பட்ட சாலைப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பச்சை விளக்குச் சமிக்ஞை கூடுதல் நேரம் ஒலிப்பதுடன் சமிஞ்கை நிறம் மாறக் குறைவான நேரம் காத்திருப்பது போன்றவை நட்பார்ந்த சாலைகளில் இடம்பெறும் புதிய அம்சங்களாகும்.

குறிப்புச் சொற்கள்