வாம்போவில் வாகன விபத்து;பாதசாரிக்கு காயம்

1 mins read
f5de5af5-49a3-4400-8859-656ea8652b84
வாம்போவில் நடந்த விபத்தில் 53 வயது பாதசாரி ஒருவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் 

வாம்போவில் புதன்கிழமை (ஜனவரி 24) நிகழ்ந்த வாகன விபத்தில் 53 வயது பாதசாரி ஒருவர் காயமடைந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

90 வாம்போ டிரைவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் காலை 6.20 மணியளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

வெள்ளை நிற கார் ஒன்று நடைபாதையின் தடுப்புகள்மீது மோதி, கூடைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள புல்வெளியில் போய் நின்றதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் அனுப்பிய புகைப்படம் காட்டியது.

விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி சேதமடைந்தது என்றும் ரத்தக் கறை படிந்த பல மெல்லிழைத் தாள்கள் தரையில் இருந்தன என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்தால் அங்கிருந்த பதாகையின் ஒரு பகுதி கழன்றுவிட்டது. அதை இரண்டு ஊழியர்கள்  சரிசெய்தனர்.

ஒரு பெண், அந்த இடத்தில் அமர்ந்து தனது வலது மணிக்கட்டைத் தேய்த்துக்கொண்டிருந்ததாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்ததாகவும் ஷின் மின் சீன நாளிதழ் செய்தி தெரிவித்தது.

இவ்விபத்து தொடர்பாக 69 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் விசாரணையில் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்