சாலைச் சந்திப்பின் போக்குவரத்து விளக்கில் பச்சை மனிதனுக்காகப் பாதசாரிகள் பொத்தானை அழுத்துவது வழக்கம். ஆனால், வருங்காலத்தில் உணரி ஒன்றின் முன்னால் தங்களின் கைகளை மட்டும் அவர்கள் அசைத்தால் போதும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் 2025ன் நான்காம் காலாண்டு முதல், தற்போது பாதசாரி அழுத்தும் இயக்கமுறை பொத்தான்கள் அனைத்தையும் மாற்றவுள்ளது. மின்காந்த அலைகளைக் கொண்டு கையசைவைக் கண்டறியும் நுண்ணலை ‘சென்சர்கள்’, பொத்தான்களுக்குப் பதிலாகப் பொருத்தப்படும்.
புதிய உணரிகள் பாதசாரியின் கையசைவைக் கண்டறியும்போது சாலையைக் கடப்பதற்கு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று உடனே போக்குவரத்து விளக்கு அமைப்பு முறைக்குத் தகவல் அனுப்பும்.
சிங்கப்பூரின் சுமார் 2,790 சாலைச் சந்திப்புகளில் கிட்டத்தட்ட 11,500 இயக்கமுறை பொத்தான்கள் தற்போதுள்ளன. அவை அனைத்தையும் மாற்றுவதற்கு ஆறாண்டுகள் ஆகும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் எதிர்பார்க்கிறது.
தொடுவதைக் குறைப்பதையும் சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஆணையம் இந்தப் புதிய நடைமுறையைத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய உணரிசார் அமைப்புமுறைகளின் சாத்தியம் குறித்து மதிப்பிட 2022, 2023 ஆண்டுகளில் முன்னோட்டத் திட்டங்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் உணரிசார் அமைப்பு முறையின் நம்பகத்தன்மை, பராமரிப்பு குறித்தும் முன்னோட்டத் திட்டங்களின்போது மதிப்பிடப்பட்டன.
வெவ்வேறு வானிலை நிலவரங்களில் நம்பகத்தன்மை, உணர்திறன் ஆகிய கூறுகள் அடிப்படையில் நுண்ணலை சென்சர்கள் மேலும் சிறப்பாக இயங்கியதாகக் கண்டறியப்பட்டது.
இயக்கமுறை பொத்தான்களுக்குப் பதிலாக உணரிகளைப் பயன்படுத்தும்போது மனிதவளமும் செலவும் குறையக் காணலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இயக்கமுறை பொத்தான்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இயங்கக்கூடியவை. ஆண்டுகளாக ஆக, கூடுதல் பராமரிப்பும் இவற்றுக்குத் தேவைப்படும்.
இதற்கிடையே, கண்பார்வை குறைபாடு உள்ளோருக்கு வழிகாட்டும் அம்சமும் புதிய உணரிகளில் உண்டு. சாலையை ஒருவர் கடக்கவிருக்கிறார் என்பதைக் குறிக்க சென்சர்கள் ஒருவித ஒலியை எழுப்பும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதுபோன்ற உணரிகள் முன்னோட்டம் கண்டு நடப்புக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.

