ஜோகூர் பாலத்தில் விபத்துக்குள்ளான பாதசாரி

ஜோகூர் பாலத்தில் விபத்துக்குள்ளான பாதசாரி

2 mins read
2ef07406-d182-430c-bc0c-3827ae926ea5
மலேசியப் பக்கத்தில் உள்ள பாலத்தில் நடப்பதைத் தடை செய்யும் விதிமுறை குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய பலகைகள் வைக்கப்பட்ட சில நாள்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. - படம்: Screengrab/Threads/aiezuddin & mohdfaiznjmi

ஜோகூர் பாலத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 14)) மோட்டார்சைக்கிள் ஒன்று பாதசாரிமீது மோதியதாகக் கூறப்படுகிறது.

அந்த விபத்து இரவு 9.15 மணியளவில் ஜோகூர் செல்லும் பாதையில் நடந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

மோட்டார்சைக்கிள் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் இரவு 9.34 மணிக்குள் விபத்து நிகழ்ந்த பகுதி சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது என்று ஆணையம் மேலும் கூறியுள்ளது.

ஷின் மின் நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, மோட்டார்சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலையின் ஆக வலதுத் தடத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது.

அந்தப் பாதசாரி சாலையைக் கடக்கும்போது பின்னால் இருந்து மோதப்பட்டு பலத்த காயமடைந்ததாக நேரில் பார்த்த ஒருவர் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.

விபத்தைத் தொடர்ந்து போக்குவரத்துக் காவல்துறையினரால் சாலையின் ஒரு பகுதியைச் சுற்றி தடுப்பு போடப்பட்டதை இணையத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்று காட்டுகிறது.

சாலையில் விழுந்து கிடந்த ஒருவருக்கு வழிப்போக்கர்கள் சிலர் உதவி செய்வதைக் காணொளியில் காண முடிந்தது.

விபத்தில் சிக்கியது ஒரு பெண் என்றும் சம்பவ இடத்திலிருந்த அவரது கணவரின் அழைப்புகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காமல் மயங்கிக் கிடந்தார் என்றும் கூறப்படுகிறது.

மலேசியப் பக்கத்தில் உள்ள பாலத்தில் நடப்பதைத் தடை செய்யும் விதிமுறை குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய பலகைகள் வைக்கப்பட்ட சில நாள்களிலேயே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

‘பாதசாரிகளுக்கு அனுமதி இல்லை’ என்பதைக் காட்டும் பலகையுடன், ‘வேக வரம்பு மணிக்கு 50 கிலோமீட்டர்’ என்பதைக் காட்டும் பலகையும் அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிங்கப்பூர்ப் பக்கத்தில் உள்ள பாலம் அருகில், பாதசாரிகள் விதியை மீறி சாலையைக் கடக்கக்கூடாது எனத் தெரிவிக்கும் பலகையும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்