சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) காலை 11.45 மணியளவில் ஈசூன் அவென்யூ 5ல் உள்ள புளோக் 741 அருகே நடையர்மீது சைக்கிள் மோதிய விபத்து நேர்ந்தது.
அதில் 74 வயது முதியவர் மாண்டார்.
இதனையடுத்து, 16 வயது சைக்கிளோட்டி கண்மூடித்தனமாகச் செயல்பட்டு மரணம் விளைவித்த குற்றத்துக்காகத் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
“விபத்து தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது. அதன்பின்னர் அந்த முதியவரைக் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மாண்ட 74 வயது முதியவரின் மகன் என்று கூறிக்கொள்ளும் ஆடவர் ஒருவர், விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் முன்வருமாறு ஃபேஸ்புக்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈசூன் அவென்யூ 5, ஈசூன் ஸ்திரீட் 11 சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்தில் உள்ள ஜோலிபீ உணவகத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.
தன் தந்தைக்காக அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைத்த வழிப்போக்கருக்கும் ஆடவர் நன்றி தெரிவித்துகொண்டார்.
