ஆரோக்கிய வாழ்க்கைமுறை பல வழிகளில் பலன் தருகிறது.
40 வயதை எட்டியோர், வியாழக்கிழமையிலிருந்து (செப்டம்பர் 18) மெடிஷீல்டு லைஃப் சுகாதாரக் காப்புறுதிச் சந்தாவைக் கட்டுவதற்கு ஆரோக்கியப் புள்ளிகளைப் பயன்படுத்தி $580 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
உடற்பயிற்சி இலக்குகளை எட்டுவது, முதல் சுகாதாரத் திட்டத்தை நிறைவுசெய்வது முதலியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய $110 வரையிலான தள்ளுபடியும் அதில் அடங்கும்.
சந்தாதாரர்கள், ஹெல்தி 365 (Healthy 365) செயலியில் 75 ஆரோக்கியப் புள்ளிகளைப் பயன்படுத்தி $1 தள்ளுபடியைப் பெறலாம். சுகாதார அமைச்சு அந்தத் தகவலை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டது.
ஆரோக்கியப் புள்ளிகளைப் பெற விரும்புவோர், செயலியில் உள்ள ஆரோக்கிய வாழ்க்கைமுறை நிகழ்ச்சிகளிலும் சவால்களிலும் பங்கெடுக்கலாம். சுகாதார மேம்பாட்டு வாரியம் அந்தச் செயலியை உருவாக்கியது.
ஆரோக்கியத் தெரிவுமுறைச் சின்னத்தைப் பயன்படுத்தி உணவு, பானங்களை வாங்குவது, உடற்பயிற்சி, உறக்க இலக்குகளை எட்டுவது முதலியவை சவால்களில் அடங்கும்.
எடுத்துக்காட்டுக்கு ஒருவர் சராசரியாக வாரந்தோறும் 150 நிமிடங்கள் மிதமானதுமுதல் கடுமையானதுவரை தொடர்ந்து ஓராண்டுக்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மெடிஷீல்டு லைஃப் சந்தாவில் ஏறக்குறைய $70 தள்ளுபடியைப் பெறலாம்.
ஹெல்தியர் எஸ்ஜி மருந்தகத்தில் சேர்ந்து, முதல் சுகாதாரத் திட்ட ஆலோசனையை நிறைவுசெய்தால் மேலும் $40 தள்ளுபடி கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
41 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டோரின் தற்போதைய மெடிஷீல்டு லைஃப் ஆண்டுச் சந்தா அரசாங்க நிதியுதவிக்கு முன்பு $637.
51 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையில் உள்ளோருக்கு அது $903ஆக உள்ளது. அவர்களைவிட முதியோர் கூடுதல் சந்தா செலுத்தவேண்டும்.
சந்தாவில் தள்ளுபடி தரும் முன்னோடித் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குத் தொடரும். அதன் பின்னர் அமைச்சு அதனை மறுஆய்வு செய்யும். திட்டத்தை மெடிஷீல்டு லைஃபின் நிரந்தரக் கூறாக்குவதுபற்றி அமைச்சு பிறகு பரிசீலிக்கும்.
“ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற நாம் அனைவருமே நடவடிக்கைகளை எடுக்கலாம். நம் ஆரோக்கியத்தை நாம் பார்த்துக்கொண்டால், செலவுமிக்க மருத்துவச் சிகிச்சை பெரும்பாலும் பின்னர் நமக்குத் தேவைப்படாமல் போகக்கூடும்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.