70 ‘எல்இடி’ அஞ்சலிப் பலகைகளால் மக்கள் அவதி

2 mins read
1cd5dcbf-4260-4711-8756-5e1aa5b44299
குளோஸ்டர் ரோட்டில் உள்ள புளோக் ஒன்றில் இறுதிச் சடங்கு நடந்துவருகிறது. அதற்காக 70 ‘எல்இடி’ பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: ஆல்வின் டான் / சமூக ஊடகம்

குளோஸ்டர் ரோட்டில் உள்ள புளோக் ஒன்றில் இறுதிச் சடங்கு நடந்துவருகிறது. அதற்காக 70 ‘எல்இடி’ அஞ்சலிப் பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பலகைகள் இருக்கும் இடத்திற்கு எதிர்த்திசையில் பெக் கியோ சமூக மன்றம் உள்ளது.

தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் அறிவுரைப்படி இறுதிச் சடங்கு நடக்கும் இடங்களில் 10 ‘எல்இடி’ பலகைகள் வரை மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் இதுகுறித்து சமூக ஊடகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 10) பதிவிட்டுள்ளார்.

“பெக் கியோ, ஃபேரர் பார்க் குடியிருப்பாளர்கள் ‘எல்இடி’ பலகைகள் தொடர்பாகத் தங்களின் அக்கறையைத் தெரிவித்துள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

திரு டான், தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அக்குழுத் தொகுதிக்குள் பெக் கியோ உள்ளது.

“பல ‘எல்இடி’ அஞ்சலிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் கண் பார்வைக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகனமோட்டிகளும் பாதசாரிகளும் அவதிக்குள்ளாயினர். அப்பகுதியில் பாலர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி உள்ளது. பெற்றோரும் பிள்ளைகளும் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டது,” என்று துணை அமைச்சர் டான் குறிப்பிட்டார்.

சில ‘எல்இடி’ அஞ்சலிப் பலகைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. அவற்றில் சில சாலையின் ‘ஜீப்ரா கிராசிங்’ முன் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் நகர மன்றம் பேசியுள்ளது. விதிமுறைகளுக்குக் கீழ் வரும் 10 ‘எல்இடி’ பலகைகள் மட்டுமே வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் திரு டான்.

“இருப்பினும் அந்தக் குடும்பத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நகர மன்ற அதிகாரிகள் மீண்டும் பேசினர். ஆனால் அக்குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரத்திலும் கூட 70 ‘எல்இடி’ பலகைகள் வெளிச்சத்துடன் எரிகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆனால், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது,” என்றார் துணை அமைச்சர் டான்.

குறிப்புச் சொற்கள்