சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் (சிஜக) வலுவான, திறன்மிக்க வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் மக்கள் செயல் கட்சி சிறப்புடன் செயலாற்ற வழிவகுக்க ஏதுவாக வலுவான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் டாக்டர் பால் தம்பையா கேட்டுகொண்டுள்ளார்.
புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடும் அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்ற ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
சிஜக எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடன் கொள்கைகள் வகுக்கும் கட்சி என்ற டாக்டர் பால் தம்பையா, அவற்றுள் சிலவற்றை அரசாங்கம் பின்பற்றியுள்ளதாகவும் கூறினார்.
“ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குமுன் மாணவர்களைத் தரம் பிரிக்கும் முறையை நீக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கக் கோரியபோது விமர்சிக்கப்பட்டோம். தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“மசெக, மனிதர்களைத் தரம் பிரிக்கும் முறைக்கு அடிமைப்பட்டுள்ளது. அக்கட்சியை அதிலிருந்து விடுவிக்கவும் முடிந்தால் குணப்படுத்தவும் வழிவகுக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று டாக்டர் பால் தம்பையா கேட்டுக்கொண்டார்.
“சிங்கப்பூரர்கள் உயிரிழக்கக்கூட முடியும். ஆனால் நோயுற்றால் செலவுசெய்ய இயலாது எனும் நிலை உள்ளது. பல்லாண்டுகளாக சிஜக ஒரே பொதுக் கட்டமைப்பின்கீழ் வரும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தை வலியுறுத்தி வருகிறது,” என்றார் அவர்.
அதிகரித்து வரும் மறுவிற்பனை வீட்டு விலை, குறையும் வீவக வீட்டின் மதிப்பு, வெளிநாட்டுத் திறனாளர்களின் குடியேற்றத்திற்கான உரிய அணுகுமுறை ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.
உடற்குறையுள்ளோர் நலனுக்காகத் தொடர்ந்து வாதாடிய தாயார், நிலையான பொருளியல் நீதி குறித்து பேசிவரும் தமக்கையார், நீரிழிவு நோய் வல்லுநரான தந்தையார் எனப் பல்வேறு வகையில் சேவையாற்றிய குடும்பத்திலிருந்து தாம் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறு ஓடையில் மீன் பிடிப்பதைவிட பெருங்கூட்டத்தில் போராட விரும்புவதாகவும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் துறையில் பொறுப்பு வகிப்பதாக நம்பப்படும் அமைச்சர் சான் சுன் சிங், மக்கள் அச்சமின்றி, நம்பிக்கையுடன் தங்களுக்குப் பிடித்தவாறு வாக்களிக்கலாம் என்பதை மறுவுறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் பால் தம்பையா வலியுறுத்தினார்.
சிங்கப்பூரர்களின் வாக்கு ரகசியமானதென்றும் துணிச்சலுடன் சென்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“ஓர் அணியின் திறன் நன்கு வெளிப்பட வேண்டுமென்றால், வலுவான எதிரணியுடன் போட்டியிட வேண்டும். அது மசெகவுக்கும் பொருந்தும்,” என்றார் அவர்.
அக்கூட்டத்தில் பேசிய மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதி வேட்பாளர் அரிஃபின் ஷா, “நேற்று (ஏப்ரல் 28) இவ்விடத்தில் அச்சம் தொனிக்கும் அரசியல் பேசப்பட்டது. இன்று நம்பிக்கை குறித்த அரசியல் பேசப்படுகிறது. சிங்கப்பூர், அமைச்சர்கள் இல்லாமல்கூட இயங்கலாம், ஆனால், தாதியர், ஆசிரியர்கள், காவல்துறையினர், ஓட்டுநர்கள், விநியோகத்துறை ஊழியர்கள் எனச் சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் மக்கள் இல்லாமல் நாடு செயல்படாது,” என்றார்.
மேலும், “இருள் விலகுமுன் பணிக்குக் கிளம்பி, இருள் சூழ்ந்தபின் வீடு திரும்புவதுதான் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை. எனினும், விலைவாசி உயரும், வருமானம் பெரிதாக உயராது. மனநலப் பிரச்சினையும் நிலவுகிறது,” என்றார் திரு அரிஃபின்.
சிஜக ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜேம்ஸ் கோமெஸ் ‘அச்சத்தை விதைக்கும்’ அரசியலைப் புறக்கணிப்போம் என்றார்.
கொள்கை விவாதங்கள் குறித்துப் பேசாமல், அதிக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்தால் சிங்கப்பூர் வலுவிழக்கும் எனும் வாதத்தை மசெகவினர் முன்வைப்பதாக அவர் சாடினார்.
கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே தனது குழு திறம்படச் செயலாற்ற முடியும் என்று பிரதமர் வோங் கூறினால், பிரச்சினை மசெகவிடம்தான் உள்ளது என்று அர்த்தம் என்றும் டாக்டர் கோமெஸ் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் நிலவும் மனநலப் பிரச்சினைக்கான சரியான தீர்வை வகுக்காதது ஒரு சுகாதார அமைச்சராக ஓங் யி காங்கின் தோல்வி என்றும், அவர் சேவையாற்ற வேண்டிய செம்பவாங் வட்டாரத்தில் அவர் குதிரைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றும் திரு கோமெஸ் குற்றஞ்சாட்டினார்.
“செம்பவாங் மக்கள் அங்குள்ள மசெக வேட்பாளர்களுக்குப் பதிலாகச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். நாங்கள் தட்டியெழுப்பும் கேள்விகளைக் கேட்போம், சிறந்த பதில்களுக்காகப் போராடுவோம்,” என்று அவர் முழங்கினார்.