மக்கள் பிணைப்பே சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உறவை வலுப்படுத்தும்: பிரதமர் வோங்

மக்கள் பிணைப்பே சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உறவை வலுப்படுத்தும்: பிரதமர் வோங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Nov 2026 - 8:11 pm

2 mins read

ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், மக்களுக்கு இடையிலான நெருங்கிய பிணைப்பே சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பங்காளித்துவத்தைப் பல தலைமுறைகளுக்கு நிலைக்கச் செய்யும் எனக் கூறியுள்ளார்.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்கள் இருநாட்டு வணிகங்களுக்கும் மக்களுக்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

புதன்கிழமை (நவம்பர் 25) காலை சிட்னியில் ஆஸ்திரேலியத் தலைமை ஆளுநர் சாம் மோஸ்டினைப் பிரதமர் வோங் சந்தித்தார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) கேன்பராவில் எதிர்க்கட்சித் தலைவர் ஏங்கஸ் டெய்லரையும் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்சையும் திரு வோங் சந்தித்தார். ஆஸ்திரேலியாவுடனான நட்பு அரசியல் கட்சிகள், மாநிலங்கள், பிரதேசங்களைக் கடந்தது என்றார் அவர்.

திங்கட்கிழமை (நவம்பர் 23) பயணத்தைத் தொடங்கிய திரு வோங், செவ்வாய்க்கிழமை காலை கேன்பராவில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசுடன் இணைந்து 11வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியத் தலைவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

இருநாடுகளும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்த புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

பெட்ரோலியப் பொருள்கள், திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் உணவு, மருந்துகள், பகுதி மின்கடத்திகளுக்கும் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படுகிறது. எல்லை தாண்டிய நிலையில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுவைக் காற்றில் கலக்கும் முன்னர் நிலத்தடியில் ஒடுக்கிவைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

பிரதமருடன் சென்றுள்ள நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி கிரேஸ் ஃபூ, ஆஸ்திரேலிய வர்த்தக, சுற்றுலா அமைச்சர் டான் ஃபாரெலைச் சந்தித்து வர்த்தகம், விநியோக நடவடிக்கைகளின் மீள்திறன், பருவநிலை நடவடிக்கை குறித்துப் பேசினார்.

வேளாண், மீன்வள, வனத்துறை அமைச்சர் ஜூலி காலின்சை முதன்முறையாகச் சந்தித்த திருவாட்டி ஃபூ, சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உணவு ஒப்பந்தத்தின்கீழ் உணவுப் பாதுகாப்புப் பற்றியும் விநியோக நடவடிக்கைகளின் மீள்திறனை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தார்.

குறிப்புச் சொற்கள்