தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிச்சயமற்ற சூழலில் மக்கள் ஒரு குழுவாகப் பணியாற்ற வேண்டும்: லீ சியன் லூங்

2 mins read
89550be3-908d-46a6-89cb-a274206ca73a
செங் சான் ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றில் பேசும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புற சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாகப் பணியாற்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.

அமெரிக்க வரி விதிப்பு, அதற்கு பதிலடி தரும் வகையில் சீனா எடுத்துள்ள நடவடிக்கை, இவை உலக வர்த்தகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றை மூத்த அமைச்சர் தமது உரையில் சுட்டினார். “இவை யாவும் வெளிநிலைப் பிரச்சினைகள். இவற்றுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், உள்ளூரில் ஒன்றிணைந்து, ஒரு குழுவாக பணியாற்றிட வேண்டும். அதன்வழி நாம் அவற்றை ஒரே மக்களாக, ஒரே நாடாக எதிர்கொள்ள முடியும். “நமது இல்லம், எதிர்காலம், நம் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது. ஒன்றாக இணைந்து வருங்காலத்தில் சிங்கப்பூர் நன்றாக இருப்பதற்கு பணியாற்றிட வேண்டும்,” என்று அவர் விளக்கினார். செங் சான் ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) நடைபெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் மேற்கண்டவாறு பேசினார். சீனப் பொருள்களுக்கு எதிராக அமெரிக்கா 145 விழுக்காடு வரி விதித்திருப்பதை அடுத்து சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்கப் பொருள்களுக்கு 125 விழுக்காடு வரி விதித்துள்ளது. மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட பெரும்பாலான நாடுகளின் பொருள்களுக்கு எதிராக குறைந்தபட்சமாக 10 விழுக்காடு அடிப்படை வரியை விதித்துள்ளது. இது உலக பொருளியல் சந்தைக்கு கடும் நெருக்குதலைத் தந்துள்ளது. அத்துடன், அது உலக விநியோகச் சங்கிலித் தொடரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள மூத்த அமைச்சர் லீ, தமது அரசாங்கத்துக்கு இதுநாள் வரை குடியிருப்பாளர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அந்த ஆதரவு தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்