பெற்றோர் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு இந்தியாவில் ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என முன்கூட்டியே திட்டமிடும் ஆகாஷ் ராம், 24, தனது நண்பர்களுடன் சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று வரும் சொத்துக் கண்காட்சிக்கு வந்திருந்த ஏராளமானோரில் ஒருவர்.
தமிழ்நாட்டின் ‘இந்தியச் சொத்து மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு’ ஏற்பாடு செய்யும் ‘தமிழ்நாடு கிரெடை ஃபேர்புரோ 2025’ (Credai Fairpro Singapore 2025) சொத்துச் சந்தை முதல் முறையாகச் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னர் அவர்கள் துபாயில் கண்காட்சி நடத்தினார்கள்.
மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) நடைபெறும் இந்தச் சொத்துச் சந்தையில் தமிழ்நாட்டின் 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு, வணிகத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“முதலீடு செய்வது பற்றி இந்த வயதில் யோசித்தால்தான் பிற்காலத்தில் அது பயனாக இருக்கும்,” என்றார் மென்பொருள் துறையில் பணியாற்றும் ஆகாஷ் ராம்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களைச் சேர்ந்த ரூ.2 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை மதிப்புள்ள சொத்துகள் கண்காட்சிக்குப் பதிவு செய்தோரின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
“தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த பலர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவரவர் சொந்த ஊரில் சொந்த வீடு அமைய வேண்டும் என்ற முனைப்பில் இக்கண்காட்சியைத் திட்டமிட்டோம். மக்கள் நம்பகத்தன்மையுடன் சொத்து வாங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று தமிழ்நாட்டின் ‘இந்தியச் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்புத்’ தலைவர் ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. அதையடுத்து 11 மணிக்குக் கண்காட்சியைக் காணப் பதிவு செய்தோர் வரத் தொடங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
பிற்பகலுக்குள் சுமார் 300 பேர் கண்காட்சியில் திரண்டனர்.
சொத்து வாங்க விரும்புவோர் அனைத்து வகை உயர்தரச் சொத்துகளைத் தேர்வு செய்ய இந்தச் சந்தை உதவியதோடு அவர்கள் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களைச் சந்தித்து உரிய தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவர்களில் பிரேம்குமார், 36, தேவி, 35 இணையரும் அடங்குவர். மலேசியர்களான அவ்விருவரும் பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் இத்தம்பதி இந்தியாவில் ஒரு சொத்து வாங்கினால் அங்கு செல்லும்போது வசதியாக இருக்கும் என்றனர்.
“வழக்கமாக, இந்தியாவுக்குச் செல்லும்போது விடுதியில் தங்கித்தான் கடைகளுக்குச் செல்வோம். ஏற்கெனவே மலேசியாவில் எங்களுக்குச் சொத்து இருக்கிறது. இந்தியாவில் சொந்த வீடு இருந்தால் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறோம்,” என்றார் பிரேம்குமார்.
“சிங்கப்பூரராக இருந்தாலும் எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க அடிக்கடி இந்தியா செல்வேன். சிங்கப்பூரில் ஏற்கெனவே ஒரு சொத்து இருந்தாலும் இங்கு முதலீடு செய்வதற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. இந்தியாவில் முதலீடு செய்தால் கட்டுப்படியாக இருக்கும்,” என்றார் டாக்டர் கே.வி. உஷா, 68.
“சிங்கப்பூரர்கள் தமிழகத்தில் இருக்கும் சொத்துகளைப் பார்வையிட்டு வாங்குவதற்கு இந்தக் கண்காட்சியில் பலவற்றைத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு அன்பளிப்புப் பைகளையும் வழங்குகிறோம். தமிழ்நாட்டில் ஃபேர்புரோ மக்கள் அறிந்த ஒன்று. அதைச் சிங்கப்பூரர்களும் அறிந்துகொள்ள இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,” எனக் கண்காட்சியின் செயற்குழு உறுப்பினர் மோதிஷ் குமார் கூறினார்.

