அண்மைய ரயில் சேவைத் தடங்கல்களைத் தொடர்ந்து, மாற்று வழிகள் மற்றும் ஒரு சம்பவத்தின்போது ஏற்படும் தாமதங்களின் கால அளவு குறித்து பயணிகளுக்கு மிகவும் துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலம், “நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்,” என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
செப்டம்பர் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சியாவ், இடையூறுகளின்போது பயணிகளுக்கு எவ்வாறு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்பதற்கான உதாரணங்களைப் பட்டியலிட்டார்.
பொதுவான ஆலோசனைகளுக்குப் பதிலாக, பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தின் அடிப்படையில் தகவல்களைப் பெற வேண்டும். இந்தத் தகவல் மையப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருவேளை ஒரே ஒரு செயலியில் இருக்க வேண்டும். இதனால் பயணிகள் எங்கு தகவல்களைப் பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
தற்போது, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தேவைக்கேற்ப, 10 நிமிடங்களுக்கு மேல் ஏற்படும் தாமதங்கள் குறித்து, ரயில் நடத்துநர்கள் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
திசை வழிகாட்டி அடையாளங்களையும் மேம்படுத்தலாம் என்றார் அமைச்சர்.
அண்மைய சேவைத் தடைகள் நிகழ்ந்தபோதிலும், சிங்கப்பூரின் எம்ஆர்டி கட்டமைப்பு, உலகளவில் மிகவும் நம்பகமான ஒன்றாகத் தொடர்கிறது என்று திரு சியாவ் கூறினார்.
ஆனால் விரிவடைந்து வரும் ரயில் கட்டமைப்புடன், எந்த இடையூறுகளும் இல்லாத ஒரு நிலைக்கு நாம் செல்வது என்பது சாத்தியமில்லை என்று அவர் எச்சரித்தார்.
“ஒவ்வோர் அமைப்பிலும், ஒவ்வொரு நகரத்திலும் ரயில் சேவை தாமதங்கள் ஏற்படுகின்றன. “நமது கைப்பேசிகள், நமது கணினிகள் அவ்வப்போது மீண்டும் இயக்கப்பட வேண்டும். கார்களும் பழுதடையும். எங்கள் ரயில்களும் அப்படியே பழுதடையும்,” என்று அமைச்சர் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் இடையூறுகளை ஆராயும் பணிக்குழு அமைக்கப்பட்டது குறித்து திரு சியாவ் கருத்துரைக்கையில், “எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் திருப்தியடைய கடினமாக முயற்சி செய்ய விரும்புகிறோம்,” என்பதால் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
நிலப் போக்குவரத்து ஆணையத் தலைமை நிர்வாகி இங் லாங் தலைமையிலான பணிக்குழுவின் கண்டுபிடிப்புகள், திரு சியாவிடம் தொடர்ந்து தெரிவிக்கப்படும். அதன் இறுதிப் பரிந்துரைகள் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும்.

