மக்கள் சக்திக் கட்சி (PPP) எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கை எதிர்த்து அங் மோ கியோ குழுத்தொகுதியில் தனது வேட்பாளர் குழுவைக் களமிறக்கவிருக்கிறது.
அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங், சனிக்கிழமை (ஏப்ரல் 5) இதைத் தெரிவித்தார்.
அங் மோ கியோ குழுத்தொகுதியில் அமைந்துள்ள சொங் பூன் சந்தை, உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமது கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை, திரு லீ பிரதமராகப் பதவி வகித்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மக்கள்தொகைக் கொள்கைகள் சரியாகக் கையாளப்படவில்லை என்பதில் கவனம் செலுத்தும் என்று திரு கோ கூறினார்.
“தற்போது அவர் பதவி விலகிவிட்டபடியால் அவரது செயல்பாடுகள் குறித்த மக்களின் உண்மையான மதிப்பீட்டைப் பெறும் நேரம் இது,” என்றார் அவர்.
சென்ற ஆண்டு (2024) மே மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய திரு லீ, அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமை வகிக்கும் அமைச்சராக விளங்குகிறார்.
2020 பொதுத் தேர்தலில் அவரது மசெக குழுவை எதிர்த்துச் சீர்திருத்தக் கட்சிக் குழு போட்டியிட்டது. 71.9% வாக்குகளுடன் மசெக குழு வெற்றிபெற்றது.
அப்போது சிங்கப்பூர் கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டம் என்பதால் திரு லீக்கு வாக்காளர்கள் அதிக ஆதரவு தந்தனர் என்று கூறிய திரு கோ, இருப்பினும் பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் சக்திக் கட்சிக்குச் சிறந்த வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும்கூட, அங் மோ கியோ குழுத்தொகுதியில் மிகச் சிறந்த தேர்தல் முடிவுகளில் ஒன்றைத் தமது கட்சி பெறும் என்றார் அவர்.
கட்சியின் பொருளாளர் வில்லியம் லிம் தலைமையில் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளர் குழு களமிறங்கும் என்றும் மற்ற வேட்பாளர்கள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.