பாட்டாளிக் கட்சியை மட்டுமின்றி மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங்.
மக்கள் சக்திக் கட்சி தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் அங் மோ குழுத் தொகுதியிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் புளோக் 826A தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் தொகுதி உலா மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்று மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் விருப்பம் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பேராசிரியர் பால் தம்பையா ஆகியோரை வாக்காளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் திரு கோ.
அவர்கள் கூறும் சில கருத்துகளுடன் தமக்கு உடன்பாடு இல்லாதபோதிலும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களானால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நிகழும் என்றார் அவர்.
தெம்பனிஸ் குழுத் தொகுதி வாக்காளர்கள் மக்கள் சக்திக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று திரு கோ கேட்டுக்கொண்டார்.

