மக்கள் தீர்ப்பே மகத்துவமானது: பிரித்தம் சிங்

2 mins read
961d1572-471b-4a42-9cf2-055530cc622f
மனசாட்சிக்கு விரோதமாக தாம் நடந்துகொள்ளவில்லை என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகில் உள்ள நீதிமன்றங்களைவிட மக்கள் கொண்டுள்ள கருத்து, அவர்களது தீர்ப்பே மிகப் பெரிது என்று தாம் நம்புவதாகப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.

மே மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் முடிவுகள், ரயீசா கான் வழக்கு தொடர்பாக மக்கள் கொண்டுள்ள கருத்தைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

2021ஆம் ஆண்டில் அப்போதைய பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ரயீசா, நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தார். அதைக் கட்சியின் தலைமைச் செயலாளர் என்கிற முறையில் திரு சிங் முறையாகக் கையாளவில்லை என்றும் அவர் ஒரு பொய்யர் என்றும் அரசியல் வட்டாரத்தில் குரல்கள் எழுந்தன.

இது தம்மைப் பாதிக்கவில்லை என்றார் திரு சிங்.

அரசியலில் இவ்வாறு நிகழ்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

சிஎன்ஏ செய்தித்தளத்தின் ‘தி அசெம்பிளி புரோகிராம்’ நிகழ்ச்சிக்குத் திரு சிங் பேட்டி அளித்தபோது இக்கருத்துகளை முன்வைத்தார்.

திரு சிங்கின் பேட்டி புதன்கிழமையன்று (நவம்பர் 5) ஒளிபரப்பானது.

நாடாளுமன்றச் சிறப்புக் குழுவிடம் பொய்யுரைத்ததற்காகத் திரு சிங்கிற்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து அவர் அண்மையில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீடு தொடர்பாக இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.

திரு சிங் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு சிஎன்ஏவுக்குப் பேட்டி அளித்தார்.

“என் மீதும் என் கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் மரியாதையைக் குறைக்க எதிர்த்தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்வர். முதலில் மனசாட்சிக்கு விரோதமற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் யார் என்ன செய்தாலும் சொன்னாலும் நிலைகுலைந்துவிடாமல் அவற்றைத் திடமாக எதிர்கொள்ளமுடியும்.

“என் மனசாட்சிக்கு விரோதமாக நான் செயல்பட்டிருந்தால் இன்று நான் உங்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருக்கமாட்டேன். கடந்த தேர்தலில் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பாட்டாளிக் கட்சி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய அளவுக்குத் தேர்தல் முடிவுகள் அமைந்தன,” என்றார் எதிர்க்கட்சித் தலைவருமான திரு சிங்.

அல்ஜுனிட் குழுத் தொகுதியைத் திரு சிங் தலைமையிலான பாட்டாளிக் கட்சிக் குழு தக்கவைத்துக்கொண்டது. அத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 59.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றது.

செங்காங் குழுத் தொகுதியையும் ஹவ்காங் தனித்தொகுதியையும் பாட்டாளிக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.

அதுமட்டுமல்லாது, அக்கட்சியைச் சேர்ந்த இருவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்