நிகழ்த்துகலை ஊழியர் வேலை அனுமதிச்சீட்டுத் திட்டம் ரத்து

2 mins read
குற்றக் கும்பல்கள் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்ததைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கை
a517bce9-7946-4c56-b5b6-32df0762a78e
மனிதவள அமைச்சு அலுவலகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிகழ்த்துகலை ஊழியர்களுக்கான (Performing Artiste) வேலை அனுமதிச்சீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படவுள்ளது.

இத்திட்டம் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடப்பில் இருந்த இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் போன்ற கேளிக்கை நிகழ்த்து கலைப் படைப்புகளை வழங்கும் நிலையங்கள், நிகழ்த்துகலை ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்துள்ளன. ஆறு மாத காலத்துக்கு அவர்களை வேலைக்கு எடுக்க வழிவகுக்கும் இத்திட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆனால், குற்றக் கும்பல்கள் இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, மனிதவள அமைச்சும் காவல்துறையும் அண்மைக் காலமாக நடத்திய முறியடிப்பு நடவடிக்கைகளில் தெரிய வந்தது. நிகழ்த்துகலை ஊழியர்களுக்கான வேலை அனுமதிச்சீட்டுத் திட்டத்தின்கீழ் இந்தக் ‘கலைஞர்கள்’ தன்னுரிமை வேலை ஏற்பாட்டோடு (freelance) மற்ற கேளிக்கை நிலையங்களில் ‘ஹோஸ்டஸ்’ எனப்படும் வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ளும் ஊழியர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்தத் திட்டம் ரத்து செய்யப்படவிருப்பதை மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 1) அறிவித்தது.

இதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அதேவேளை, இத்திட்டத்தின்கீழ் இதுவரை வேலை அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டோரை அவர்களின் வேலை ஒப்பந்தக் காலம் நிறைவடையும் வரை அல்லது அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட நேரிடும் வரை வேலையில் வைத்துக்கொள்ளலாம்.

குற்றக் கும்பல்கள், செயல்பாட்டில் இல்லாத போலி கேளிக்கை நிலையங்களைக் கொண்டு நிகழ்த்துகலை ஊழியர்களுக்கான வேலை அனுமதிச்சீட்டுத் திட்டத்தின்கீழ் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

“இத்திட்டம் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டம் அதன் நோக்கத்தைப் பூர்த்திசெய்யவில்லை என்று மனிதவள அமைச்சு முடிவெடுத்துள்ளது. அதனால் மனிதவள அமைச்சு இத்திட்டத்தை ரத்து செய்கிறது,” என்று அமைச்சு கூறியது.

மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட கேளிக்கை நிலையங்களுக்கு அவகாசம் தர, சிங்கப்பூர் இரவுநேரக் கேளிக்கை வர்த்தகச் சங்கத்துடன் (எஸ்என்பிஏ) தாங்கள் ஆலோசித்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்