சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவம் திருட்டு; இருவர் கைது

சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவம் திருட்டு; இருவர் கைது

2 mins read
0071a429-3e82-41f5-a8ca-faa5ee377a4a
இரு வெவ்வேறு வாசனைத் திரவத் திருட்டுச் சம்பவங்களில் ஆடவர் இருவர் கைதுசெய்யப்பட்டனர். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

நூற்றுக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள வாசனைத் திரவங்களைத் திருடிய இரு வெவ்வேறு சம்பவங்களில் வெளிநாட்டு ஆடவர் இருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயது ஆடவரும் அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயது ஆடவரும் அவர்களில் அடங்குவர் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இருவர்மீதும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை கூறியது.

கடை போன்ற ஓர் இடத்தில் அல்லது வீட்டில் திருடும் குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

2025ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மாலை 6.45 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் உள்ள ஒரு கடை ஊழியரிடமிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை அதன் அறிக்கையில் கூறியது.

அந்தச் சம்பவத்தில் ஆஸ்திரேலிய ஆடவர் சம்பந்தப்பட்டிருந்தார். காட்சிப் பெட்டகத்தில் இருந்த இரண்டு $430 மதிப்புள்ள வாசனைத் திரவங்கள் காணாமல் போனதை ஊழியர் கண்டறிந்து புகார் அளித்தார்.

கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகள்மூலம் அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார். அவர் மாலை 4.50 மணியளவில் அவற்றை எடுத்துக்கொண்டு கட்டணம் செலுத்தாமல் போனது காணொளியில் தெரியவந்தது.

ஆனால் அவரை விசாரிப்பதற்குமுன் விமானத்தில் ஏறி சிங்கப்பூரைவிட்டு அவர் வெளியேறினார்.

அதே ஆடவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி, எட்டு மாதங்களுக்குப் பிறகு, மாற்று விமானம் ஒன்றில் ஏற சாங்கி விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிகாலை 1.25 மணியளவில் சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் உள்ள கடையில் காட்சிப் பெட்டகத்தில் இருந்த வாசனைத் திரவம் காணாமல்போனது குறித்து காவல்துறைக்கு அங்கிருந்த ஊழியர் மூலமாகத் தகவல் கிடைத்தது.

$310 மதிப்புள்ள அந்த வாசனைத் திரவத்தை மற்றோர் அமெரிக்க ஆடவர் கட்டணம் செலுத்தாமல் இரவு 12.40 மணியளவில் எடுத்துச் சென்றது அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகள்மூலம் தெரியவந்தது. விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

அந்த ஆடவர் மேலும் இரு வாசனைத் திரவங்களை அங்கிருந்த வேறு இரு கடைகளில் திருடியதும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகள்மூலம் கண்டறியப்பட்டது. மொத்தம் $717 மதிப்புள்ள அந்த மூன்று வாசனை திரவங்களும் பிறகு சந்தேகப் பேர்வழியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
சாங்கி விமான நிலையம்முனையம்திருட்டுஆஸ்திரேலியாஅமெரிக்காஆடவர்குற்றச்சாட்டுநீதிமன்றம்காவல்துறைஊழியர்கைது