பாதிரியாரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துசெல்ல, அரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்தச் சம்பவம் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் நடந்தது.
பஸ்நாயக கீத் ஸ்பென்சர், 37, நவம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக காணொளி இணைப்பு மூலம் திங்கட்கிழமை (டிசம்பர் 2) நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
சாங்கி சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பஸ்நாயகவிற்குப் பிணை வழங்கப்படாது.
அதற்குப் பதில், அவர் தற்போது உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவில் தடுத்துவைக்கப்படுவார். அவரது வழக்கு டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பஸ்நாயக, நவம்பர் 9ஆம் தேதி மாலை 6.30 மணிவாக்கில், செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் 57 வயது பாதிரியார் கிறிஸ்டஃபர் லீயைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தாக்குதலில், பஸ்நாயக மடக்குக் கத்தியைப் பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
அவர் கத்தியால் பாதிரியாரின் வாயில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால், பாதிரியாரின் நாக்கில் எட்டு சென்டிமீட்டர் நீளத்துக்கும் உதட்டில் மூன்று சென்டிமீட்டர் நீளத்துக்கும் வாயின் ஓரத்தில் நான்கு சென்டிமீட்டர் நீளத்துக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பஸ்நாயகவிற்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
இந்நிலையில், தேவாலயம் தனது பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி வருவதாக செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் வழிபடுவோருக்கு அனுப்பப்பட்ட செய்தி மடலில் தெரிவிக்கப்பட்டது.