தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொண்டோமினியங்களில் உள்வாகனச் சாதனம் பொருத்தும் சேவைகளுக்கு அனுமதி

2 mins read
9650d91e-ecfe-4f47-83c8-24b778b52fa2
கிட்டத்தட்ட 200,000 வாகனங்கள் இன்னும் ‘ஓபியு’ கருவியைப் பொருத்தவில்லை. - படம்: சாவ்பாவ்

கொண்டோமினியம் போன்ற இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் இஆர்பி 2.0 உள்வாகனக் கருவியைப் (ஓபியு) பொருத்தும் சேவைகளுக்கு ஆதரவு அளிப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) தெரிவித்தது.

சேனல் நியூஸ் ஏஷியாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், கொண்டோமினியம்கள் மற்றும் பொது, தனியார் நிறுவனங்களின் கட்டடம் போன்ற இடங்களில் வழங்கப்படும் இத்தகைய சேவைகள், வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் வசதியை வழங்குகின்றன என்றும் ஓபியு கருவியைப் பொருத்துதலை ஊக்குவிக்கின்றன என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 200,000 வாகனங்கள் இன்னும் ஓபியு கருவியைப் பொருத்தவில்லை என்றும், ஓபியு பொருத்தும் நடவடிக்கை 2026ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

“இந்த ஓபியு கருவியைப் பொருத்தும் சேவை, ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இதில் வைக்கோம், இன்டேக்கோ, எஸ்டிஏ வாகன பரிசோதனை நிலையம் ஆகியவை அடங்கும். இது வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் வசதியை வழங்குவதால், கோரிக்கையின் பேரில் பொதுவாகச் செய்யப்படும் இந்த ஏற்பாடுகளுக்கு ஆணையம் ஆதரவளிக்கிறது,” என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“ஓபியு கருவி பொருத்தும் பெரும்பாலான சேவைகள், நியமிக்கப்பட்ட பட்டறைகள் அல்லது ஓபியு கருவி பொருத்தும் நிலையங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் ஒரு குடியிருப்பு அல்லது கட்டட வளாகத்துக்குள் போதுமான தேவை இருந்தால் மற்றும் தள நிலைமைகள் பொருத்தமானதாக இருந்தால், நேரடி கருவி பொருத்தும் சேவைக்கு ஏற்பாடு செய்யலாம்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த தற்காலிக ஓபியு கருவி பொருத்தும் நடவடிக்கை, நியமிக்கப்பட்ட மையங்களில் மேற்கொள்ளப்படும் அதே கருவி பொருத்துதல் தரநிலைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவோ அல்லது ஆணையத்தின் முன்பதிவு இணையவாசலைப் பயன்படுத்தவோ தேவையில்லாமல், வாகன ஓட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளில் நேரடியாக ஓபியு கருவியைப் பொருத்தும் சேவைகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்