2026 தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்கள், இம்முறை அணிவகுப்பு நடைபெறும் இடமான தேசிய விளையாட்டரங்கிற்குள் மக்கள் நிபுணத்துவப் புகைப்படக் கருவிகளைக் கொண்டு செல்வதற்கும் அணிவகுப்பை நேரலை செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளனர்.
தேசிய தின அணிவகுப்பின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கமான என்டிபீப்ஸ் (NDPeeps), சனிக்கிழமை (ஜூலை 4) இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டுள்ள புதிய தகவலில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் அணிவகுப்புக்குக் கொண்டுசெல்லத் தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நாங்கள் வழிகாட்டி நெறிமுறைகளைப் புதுப்பித்துள்ளோம். கேள்விகளுடன் எங்களைத் தொடர்புகொண்ட அனைவருக்கும் நன்றி. நீங்கள் விளையாட்டரங்கிற்குச் செல்வதற்குத் தயாராவதை எளிதாக்கும் வகையில், தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் திருத்தங்களைச் செய்துள்ளோம்,” என்று அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
அணிவகுப்பை நேரலை செய்வதற்கும் நிபுணத்துவப் புகைப்படக் கருவிகளைக் கொண்டு செல்லவும் ஏற்பாட்டாளர்கள் அனுமதி அளித்துள்ள போதிலும், அதிர்வுதாங்கிகள் (Gimbals), செல்ஃபி குச்சிகள், முக்காலிகள் (Tripods), ஒற்றைக்காலிகள் (Monopods) ஆகியவற்றிற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியல், வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு என்டிபீப்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், டின் உணவுகள், திரவப் பொருள்கள் அடங்கிய தண்ணீர்ப் புட்டிகள், ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்டவை தடைசெய்யப்பட்ட இதர பொருள்களுள் அடங்கும்.
55,000 பேர் அமரக்கூடிய வசதிகொண்ட தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் இவ்வாண்டின் அணிவகுப்புக்கு ஏறத்தாழ 42,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

