சிங்கப்பூரில் வானம் தெளிவாக இருந்தால், ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலைவரை ‘பெர்சீட்’ விண்கல் மழையைக் காணலாம்.
நள்ளிரவுக்குப் பிறகு அதனை மேலும் தெளிவாகக் காணலாம் என்று தேசியப் பல்கலைக்கழக விண்மண்டலக் கழகத்தின் தலைவர் ஹிர்வான் ஷா கூறினார்.
கழகத்தின் சுயேட்சைக் கணக்கெடுப்பின்படி, ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக மூன்று முதல் ஏழு விண்கற்களை பொதுமக்கள் பார்க்கலாம் என்றார் திரு ஹிர்வான்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நள்ளிரவுக்கும் ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிவரைக்கும், ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள்வரை காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவியல் நிலைய வான் ஆய்வுக்கூடம் கூறியது.
இந்த நான்கு மணி நேரத்தில், பூமியில் சிங்கப்பூரின் அமைவிடம் விண்கற்கள் வரும் பகுதியை நோக்கி இருப்பதாகத் திரு ஹிர்வான் தெரிவித்தார். அதனால் அவற்றில் அதிகமானவற்றைக் காணலாம்.
விண்கல் மழையைக் காண சிறப்புக் கருவிகள் தேவையில்லை என்று ஆய்வுக்கூடம் கூறியது.
சிங்கப்பூரில் லேசான தூசுமூட்டம், விண்கல் மழையைத் தெளிவாகப் பார்ப்பதைப் பாதிக்கலாம் என்றும் அது சொன்னது.
‘பெர்சீட்’ விண்கல் மழை, ஒவ்வோர் ஆண்டும் ஜாலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் இறுதிவரை விண்ணில் ஏற்படும் ஒரு நிகழ்வாகும்.

