புனித குர்ஆன் மறைநூலைக் காலால் மிதிப்பது போன்ற காணொளியின் பின்னணியில் உள்ளவர், இதற்கு முன்பும் இதுபோன்ற காணொளிகளைப் பதிவேற்றம் செய்த அதே நபராக இருக்க வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு ஜூலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டதாகத் திரு சண்முகம் தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூரில் பொதுப் பேருந்தில் ஒருவர் குர்ஆனை மிதிப்பதுபோன்ற காணொளி சமூக ஊடகங்களில் வலம்வரத் தொடங்கியது. பின்னர், இணையக் குற்றவியல் தீங்குகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் (OCHA) பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் மெட்டா நிறுவனம் அதை நீக்கியதையடுத்து தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் அது குறித்துப் பேசினார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காத்திப் (Khatib) பன்முக விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நோன்புத் துறப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
குற்றவாளி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் சிங்கப்பூர் திரும்பியதும் காவல்துறை அவரை விசாரிக்கவுள்ளது.
சென்ற ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டபோது அவர் மனநலம் சரியில்லாமல் இருந்ததற்கான சில ஆதாரங்கள் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், இது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு மட்டுமான பிரச்சினையன்று என்றும் அனைத்துச் சமூகங்களையும் பாதிக்கக்கூடியது என்றும் சொன்னார்.
“சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பு மிகவும் மதிப்புமிக்கது. மேலும், இத்தகைய செயல்கள் நமது பல இனச் சமூகத்தில் நாம் கடுமையாக உழைத்து உருவாக்கிய நம்பிக்கையைச் சிதைக்கின்றன,” என்று கூறினார் டாக்டர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் அந்த நபர் புனித குர்ஆனைக் காலால் மிதிப்பது போன்ற காணொளி குறித்து, மலேசிய மக்களிடமிருந்து தங்களுக்குப் பல புகார்கள் வந்துள்ளதாக மார்ச் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவிய அந்தக் காணொளி 2024ஆம் ஆண்டைச் சேர்ந்த பழைய காணொளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளி இப்போது இல்லையென்றாலும், அது சமூக ஊடகத் தளங்களில் மீண்டும் பதிவேற்றப்பட்டு, பகிரப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சு மார்ச் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் போர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சண்முகம், அது சிங்கப்பூரைப் பொருளியல் ரீதியாக பாதிக்கும் என்றார்.
“எண்ணெய், எரிவாயு விலை ஏற்கெனவே அதிகரித்துவிட்டது. மேலும், சில வளைகுடா நாடுகளின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் இந்தச் சூழ்நிலையைப் பற்றிப் பேசியுள்ளதால் அவை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எண்ணெய், எரிவாயு விநியோகம் நிறுத்தப்படலாம் என்று குறைந்தபட்சம் ஒருவராவது கூறியுள்ளார்,” என்றார் திரு சண்முகம்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மூன்று முதல் நான்கு வாரங்கள் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தாலும் அதன் பின்னரும் போர் நீடிக்கக்கூடும் என்பதை அண்மைய அறிக்கைகள் உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

