‘ஐஜூஸ்’ பழச்சாறு இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழலை நக்கிவிட்டு மீண்டும் அதில் வைத்ததாக நம்பப்படும் ஆடவர் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன் எனும் அந்த 19 வயது ஆடவர்மீது குறும்புச் செயலில் ஈடுபட்டதாகவும் பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருந்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதிவாக்கில் தாம்சன் ரோட்டில் உள்ள கோல்ட்ஹில் சென்டர் கட்டடத்தில் பிரான்சைச் சேர்ந்த அவர் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
மெக்ஸ்மிலன், ‘ஐஜூஸ்’ இயந்திரத்திலிருந்த உறிஞ்சுகுழலை நக்கிவிட்டு மீண்டும் அதன் உறிஞ்சுகுழல் விநியோகப் பகுதிக்குள்ளேயே வைத்ததாகக் கூறப்படுகிறது. அச்செயலில் தான் ஈடுபட்டதைக் காணொளியாகப் பதிவுசெய்து அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆரஞ்சுப் பழங்களை நேரடியாகப் பிழிந்து பழச்சாறைத் தயார்செய்து தரும் இயந்திரங்களை நடத்தும் ‘ஐஜூஸ்’, சம்பந்தப்பட்ட இயந்திரத்தில் இருந்த எல்லா உறிஞ்சுகுழல்களையும் மாற்றவேண்டியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் பதிவான காணொளி மார்ச் மாதம் 12ஆம் தேதி இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. அதனைப் பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்ததுடன் கவலைக்கு ஆளாயினர்.

