லஞ்சம் கொடுத்துச் சிக்கியவர் $50 மி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு

லஞ்சம் கொடுத்துச் சிக்கியவர் $50 மி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு

1 mins read
02728dd5-00a6-4825-89c6-130e46a48b37
இஸா மீது 102 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செர்டிஸ் சிஸ்கோ பாதுகாப்புச் சேவையின் உயர் அதிகாரி ஒருவருக்கு 58,000 வெள்ளி லஞ்சம் கொடுத்த வழக்கில் நஸரிஷாம் முகம்மது இஸா என்னும் ஆடவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்நிலையில், 47 வயது இஸாமீது 50 மில்லியன் வெள்ளிக்கு மேலான முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப்போது இஸா 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

மோசடி நடவடிக்கைகள் நடந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் அவர் எம்டிஎன் கன்சல்டன்ட்ஸ் அண்ட் பில்டிங் மேனேஜ்மென்ட், நஸா ஹோல்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் இயக்குநராக இருந்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை எம்டிஎன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுடன் 319 ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதாகத் தெரிவித்தது. இதன் மொத்த முதலீட்டு மதிப்பு $50.62 மில்லியனாகும்.

இந்த ஒப்பந்தங்களின்படி முதலீட்டாளர்களுக்கு மாதாந்தர லாபத்தைத் தருவதாகவும், ஒவ்வொரு முதலீட்டுக் காலத்தின் முடிவிலும் முதலீட்டுத் தொகையை முழுமையாகத் திருப்பித் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனம் லாபம் ஈட்டும் எந்தவொரு வர்த்தகத்தையும் செய்யவில்லை. மேலும் இஸா, பல ஆவணங்களைப் போலியாகவும் தயாரித்துள்ளார்.

“இஸா மீது 102 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்,” காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்