ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டு பதின்மவயது பெண்ணுக்கு மரணம் விளைவித்த ஆடவர், தனது மாணவர் அல்லர் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) தெரிவித்தது.
அவர் என்யுஎஸ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய, முன்னாள் மாணவர் அல்லர் என்றும் அவருக்கும் அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று என்யுஎஸ் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது அவர் என்யுஎஸ் மாணவராக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்களிலும் ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அபாயகரமான முறையில் கார் ஓட்டி குமாரி லீன் லிம் ஜியா லே உயிரிழக்கக் காரணமாக இருந்ததை 30 வயது ஜெரட் டீ லீ கியாட் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஜூன் 27ல் ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட மெர்செடிஸ் பென்ஸ் காரை டீ ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அவர் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டார்.
அந்த மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் குமாரி லிம் பயணம் செய்துகொண்டிருந்தார்.
காரை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் டீ ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“மோட்டார் சைக்கிள் பறப்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா,” என்று காரில் தம்முடன் பயணம் செய்துகொண்டிருந்தோரிடம் டீ கேட்டதாக அறியப்படுகிறது.
தமது காரை அந்த மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல இருந்தபோது அதைத் தடுக்க காரை அதன் திசை நோக்கி திருப்பினார் டீ.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
மோட்டார் சைக்கிளோட்டி திரு கோவன் டானும் குமாரி லிம்மும் தூக்கி எறியப்பட்டனர்.
குமாரி லிம்முக்குப் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் மாண்டார்.
திரு டானும் காயமடைந்தார்.
சம்பவ இடத்திலேயே டீ கைது செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள் தம்மை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்ததாகக் காவல்துறையிடம் டீ பொய்யுரைத்தார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குமாரி லிம்முக்கு ஏற்பட்ட கதி நியாயமானதே என்று தமது நண்பரிடம் டீ கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.