ஜூரோங்கில் டவர் டிரான்சிட் பேருந்து தொடர்பான விபத்தில் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தைப் (பிஎம்ஏ) பயன்படுத்திய ஒருவர் மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை 9:45 மணியளவில் கார்ப்பரேஷன் டிரைவில் பேருந்து, 52 வயதுடைய பிஎம்ஏ ஓட்டுநர் தொடர்பான விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக திங்கட்கிழமை (ஜூலை 20) காவல்துறை கூறியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்த பிஎம்ஏ ஓட்டுநரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தது.
இதற்கிடையே போக்குவரத்து நிறுவனமான டவர் டிரான்சிட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎம்ஏ ஓட்டுநர் நடைபாதையிலிருந்து விலகி, பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைந்துகொண்டிருந்த சேவை எண் 49 பேருந்தின் பக்கவாட்டில் மோதியதாகத் தெரிவித்தது.
அந்த மோதலில் பயனாளர் பிஎம்ஏ சாதனத்திலிருந்து கீழே விழுந்ததாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு பேருந்து ஓட்டுநரும் வழிப்போக்கர் ஒருவரும் அவருக்கு உதவியதாகவும் டவர் டிரான்சிட் கூறியது.
பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
ஷின் மின் டெய்லி நியூஸ் தகவலின்படி, பிஎம்ஏ சாதனத்தின் ஒரு பகுதி பேருந்தின் அடியில் சிக்கியிருந்ததை ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.
ஒரு புகைப்படத்தில், பிஎம்ஏவின் கைப்பிடி முற்றிலும் உடைந்து போயிருப்பதைக் காண முடிகிறது. இணையத்தில் பரவி வரும் விபத்துக்குப் பிந்திய ஒரு காணொளியில், தலையில் கட்டுப்போடப்பட்ட ஒருவரை மூன்று துணை மருத்துவ ஊழியர்கள் அவசரவாகன படுக்கையில் தூக்கிச் செல்வது தெரிகிறது.

