ஒதுக்குப்புறமான பகுதியில் தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டுச் சென்றவருக்கு $8,000 அபராதம்

ஒதுக்குப்புறமான பகுதியில் தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டுச் சென்றவருக்கு $8,000 அபராதம்

படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

28 May 2026 - 1:07 pm

1 mins read

தாமான் ஜூரோங்கில் பேரளவிலான பழைய அலுவலகப் பொருள்களையும் மரப்பலகைகளையும் சட்டவிரோதமாகப் போட்டுச் சென்றதை ஒப்புக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் 2025 ஜூலை 6ஆம் தேதி நிகழ்ந்தது.

இதுகுறித்து தேசிய சுற்றுப்புற வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜூ யீ சாலையில் ஒதுக்குப்புறமான பகுதியில் சட்டவிரோதமாகப் பொருள்கள் போட்டுச் செல்லப்பட்டிருப்பது பற்றி 2025 ஜூலை 24ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து தனக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

மெக்பர்சனில் உள்ள கென்டிங் லேனில் காலி அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளின்போது அகற்றப்பட்ட கழிவுகள் அவை என்பது வாரியம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அலுவலக அறைகலன்களையும் தடுப்புப் பலகைகளையும் முறையாக அகற்ற, உரிமம் பெற்ற பொதுக் கழிவு அகற்றும் இடத்திற்கு எடுத்துச் செல்லாமல், தமது சொந்த வசதிக்காக சட்டவிரோதமாகக் கொட்டியதை லாரி ஓட்டுநர் நாயுடு மனிஷ் குமார் ஒப்புக்கொண்டதாக வாரியம் குறிப்பிட்டது.

“சட்டவிரோதமாகக் கழிவுகளைப் போட்டுச் செல்வது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் பொதுச் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதால் அது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.

“சட்டவிரோதமாகக் கழிவுகளை வீசிவிட்டுச் செல்பவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வாரியம் தயங்காது,” என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்களுக்குத் தெரியவரும் இத்தகைய தகவல்கள் குறித்து வாரியத்தின் இணையக் கருத்துப் படிவம், myENV கைப்பேசிச் செயலி அல்லது 1800-CALL-NEA (1800-2255-632) என்ற தொலைபேசி உதவி எண் ஆகியவற்றின் வழியாகப் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
அறைகலன்அபராதம்சட்டவிரோதம்