சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்த பெண் போதைப்பொருளுடன் பிடிபட்டார். அவரிடம் 18.45 கிலோ எடை மெத்தம்ஃபெட்டமின் வகை போதைப்பொருள் இருந்தது. அதன் தோராய மதிப்பு S$4.1 மில்லியன்.
அந்த 33 வயது நியூசிலாந்துப் பெண் ஜனவரி 4ஆம் தேதியன்று ஆக்லாந்து விமான நிலையத்தை அடைந்ததாக நியூசிலாந்துச் சுங்கத்துறை தெரிவித்தது.
அவரது பயணப் பெட்டியைச் சோதனையிட்டபோது அதில் 18 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றில் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கத்துறை கூறியது.
நியூசிலாந்துக்குள் போதைப்பொருள் கொண்டு வந்ததாக அப்பெண் மீது ஜனவரி 5ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
ஏப்ரல் மாதம் வரை அவர் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
“பயணப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிந்தாலும் தெரியாவிடிலும் அதில் போதைப்பொருள் இருந்தால் கைது செய்யப்படுவீர்,” என்று பயணிகளுக்கு ஆக்லாந்து விமான நிலையத்தின் சுங்கத்துறை மேலாளர் பால் வில்லியம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“போதைப்பொருளிடமிருந்து நியூசிலாந்து மக்களைப் பாதுகாப்பதிலும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் நியூசிலாந்துச் சுங்கத்துறை தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது,” என்றார் அவர்.

