புற்றுநோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு: தேசிய புற்றுநோய் மையம் விளக்கம்

புற்றுநோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு: தேசிய புற்றுநோய் மையம் விளக்கம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Sep 2026 - 7:52 pm

2 mins read

தேசிய புற்றுநோய் மையம் அனுப்பிய ஓர் அழைப்பிதழில் நோயாளிகளின் அடையாளங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் பணிபுரியும் இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை எழுப்பியுள்ளது.

மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோய்க்குறியால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த அழைப்பிதழை தேசிய புற்றுநோய் மையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அனுப்பி இருந்தது.

இருப்பினும், மின்னஞ்சல் பெறுபவர்களின் முகவரிகளை மறைத்து வைக்கும் ‘பிளைண்ட் கார்பன் காப்பி’ (BCC) வசதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘கார்பன் காப்பி’ (CC) வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், அந்த மின்னஞ்சலைப் பெற்றவர்கள் பிற நோயாளிகளின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அவர்கள் பணி நிறுவனத்தின் மின்னஞ்சலைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களின் பணிபுரியும் இடங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது.

மையம் அனுப்பிய அடுத்த மின்னஞ்சலில், பிறரின் முகவரிகள் வெளிப்பட்ட முந்தைய மின்னஞ்சலை அழித்துவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த மின்னஞ்சலை வேறு யாருக்கும் பகிரவேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தவோ சேமிக்கவோ வேண்டாம் என்றும் நோயாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

“இது மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே பாதித்த ஒரு நிர்வாகத் தவறு என்பதை உறுதிப்படுத்துகிறோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் நடைமுறைகளைத் தீவிரமாக மதிப்பாய்வு செய்து வருகிறோம்,” என்று அந்த இரண்டாவது மின்னஞ்சலில் விளக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சாளர், சம்பவம் குறித்துத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கூடுதல் தகவல்களை அறிய தேசிய புற்றுநோய் மையத்தையும் சிங்ஹெல்த் குழுமத்தையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்விசாரணைகசிவு