சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் (PMDs) இருவர் அமர்ந்து சென்ற சம்பவங்களைப் படம் பிடித்துள்ளார் ‘டிகே’ என்று அறியப்படும் ‘ஸ்டோம்ப்’ (STOMP) வாசகர்.
ஆர்ச்சர்ட் ரோட்டின் மாண்டரின் கேலரி அருகே ஆகஸ்ட் 8ஆம் தேதி, முதல் சம்பவத்தைப் படம் பிடித்ததாக அவர் கூறினார்.
அச்சம்பவத்தைக் காட்டும் அவரது காணொளியில் இருவர் தனிநபர் நடமாட்டச் சாதனமொன்றில் அமர்ந்து செல்வதையும் கையில் எடுத்துச்செல்லக்கூடிய ஒலிபெருக்கிகள் மூலம் மிகவும் சத்தமாக இசையை ஒலிக்கவிட்டபடி அவர்கள் செல்வதையும் காணமுடிகிறது.
மற்றொரு சம்பவம் ஜூலை 30ஆம் தேதி தியோங் பாருவில் உள்ள கிம் தியன் விஸ்தாவில் இடம்பெற்றது.
அச்சம்பவத்தில், தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிய பெண் புகைபிடித்ததாகவும் பின்னர் சிகரெட் துண்டைத் தரையில் வீசியதாகவும் ‘டிகே’ கூறினார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் விதிமுறைகளின்கீழ், தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்கள் (PMAs) அல்லது நடமாட்டச் சாதனங்களில் (mobility scooters) ஒருவர் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். நடமாட்டச் சிக்கலை எதிர்கொள்வோர் பயன்படுத்துவதற்கானவை அவை.
‘பிஎம்ஏ’ சாதனங்களைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் இரு இருக்கைகள் கொண்ட சாதனங்கள் ‘பிஎம்டி’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இச்சாதனங்களைச் சைக்கிள் பாதைகளிலும் சைக்கிளோட்டிகளுடன் பகிரப்படும் பாதைகளில் மட்டும் பயன்படுத்தலாம். நடைபாதைகளில் இவற்றைப் பயன்படுத்த அனுமதியில்லை.
அச்சாதனங்கள் ‘UL2272’ சான்றிதழைப் பெற்றிருப்பதும் அவசியம்.

