கேபிஇ விரைவுச்சாலையில் அதிவேகத்தில் சென்ற தனிநபர் நடமாட்டச் சாதனம்

கேபிஇ விரைவுச்சாலையில் அதிவேகத்தில் சென்ற தனிநபர் நடமாட்டச் சாதனம்

2 mins read
0f04413f-34a8-48cd-a8ae-9e2303c028b9
விதிமீறும் சைக்கிள் ஓட்டுநர்கள், தனிநபர் நடமாட்டச் சாதனப் பயனர்களை இலக்காகக் கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளின் போது 300க்கும் மேற்பட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டன. - படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்
Google News Preferred Icon

ஜூலை மாதம் காலாங்-பாய லேபார் (கேபிஇ) சுரங்கச் சாலையில் இருவரை அதிவேகத்தில் ஏற்றிச் சென்றதற்காக ஒரு தனிநபர் நடமாட்டச் சாதனம் (பிஎம்டி) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 13ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு மூன்று நாள்களுக்குள் அமலாக்க அதிகாரிகள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம், ஆகஸ்ட் 13ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது மேலும் கூறியுள்ளது.

எஸ்ஜி ரோட் விஜிலான்டே என்ற யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட வாகன கேமரா காணொளியில், இருவர் அந்த பிஎம்டியில் அமர்ந்தவாறு ஒரு விரைவுச்சாலை சுரங்கப்பாதையில் பல வாகனங்களை முந்திச் செல்வது பதிவாகியுள்ளது.

ஆணையத்தின் ஒன்மோட்டோரிங் இணையத்தளத்தின்படி, பிஎம்டிக்கள் எல்லாச் சாலைகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அவை விரைவுச்சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் பயணம் செய்ய முடியாது.

காணொளியில், பிஎம்டியும் அதன் ஓட்டுநர்களும் ஒரு வளைவைக் கடக்கும்போது ஓர் ஒளிக்கீற்று தென்படுகிறது. இது வேகக் கண்காணிப்புக் கேமரா இயக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. அதன்பிறகு அவர்கள் தெற்கு நோக்கிய விமான நிலையச் சாலையிலிருந்து வெளியேறும் வழியை நெருங்குவது காணப்படுகிறது.

கேபிஇ சுரங்கச் சாலையில் பல வேகக் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. அந்த விரைவுச்சாலையில் வேக வரம்பு பொதுவாக மணிக்கு 80 கி.மீ. ஆகவும், சில பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. ஆகக் குறைக்கப்பட்டும் உள்ளது.

இயந்திரம் பொருத்தப்பட்ட பிஎம்டிக்களுக்கு, மணிக்கு 25 கி.மீ. என்ற அதிகபட்ச வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த காணொளியில் உள்ள பிஎம்டியின் வாகனப் பதிவு எண் தெரியவில்லை. ஆணையத்தின் விதிமுறைகளின்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து பிஎம்டிக்களும் சாதனத்தின் முன்புறத்திலோ பக்கங்களிலோ நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கிய பதிவுச் சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

அதன்பிறகு இந்த யூடியூப் வீடியோ பரவலாகி, 24,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 240க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

விதிமீறும் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் நனிநபர் நடமாட்டச் சாதனப் பயனர்களுக்கு எதிரான மற்ற அமலாக்க நடவடிக்கைகளில், விதிமுறைகளுக்கு உட்படாத 100 சாதனங்களைப் பறிமுதல் செய்ததுடன், 310 விதிமீறல்களையும் ஆணையம் கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்
பறிமுதல்நிலப் போக்குவரத்து ஆணையம்வரம்பு