தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பிஎம்ஏ’போல் தோற்றமளிக்கும் சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
2709086b-9748-4956-9938-71064f9db32f
இந்த ஆண்டிறுதிக்குள் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தைப் பயன்படுத்த மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப்போல் (PMA) தோற்றமளிக்கும் சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு (2024) ஐந்து மடங்குக்குமேல் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிட்டு நிலப் போக்குவரத்து ஆணையம் அவ்வாறு தெரிவித்தது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று அது கூறியது.

இந்த ஆண்டிறுதிக்குள் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தைப் பயன்படுத்த மருத்துவச் சான்றிதழைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையும் அவற்றில் அடங்கும்.

இதுகுறித்த கேள்விகளுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி பதிலளித்த ஆணையத்தின் பேச்சாளர், 2024ல் பதிவான இத்தகைய குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 38 என்றும், 2023ல் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப்போல் தோற்றமளிக்கும் சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6 என்றும் கூறினார்.

அடிக்கடி நடந்த குற்றச்செயல்களில் விதிமுறைகளுக்கு உட்படாத சாதனங்களின் பயன்பாடும் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப்போல் தோற்றமளிக்கும் சாதனங்கள் அல்லது மின்ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டிய சம்பவங்களும் அடங்கும் என்றார் அவர்.

துணைபுரியும் தொழில்நுட்ப நிதி மற்றும் மூத்தோர் நடமாட, இயங்க வழங்கப்படும் உதவிநிதி ஆகியவற்றின்கீழ் சலுகை விலையில் வழங்கப்படும் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தும் உடற்குறையுள்ளோரும் மூத்தோரும் அந்தச் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவர்கள் கூடுதலாக சான்றிதழ் வாங்கத் தேவையில்லை.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 10 கிலோமீட்டரிலிருந்து மணிக்கு 6 கிலோமீட்டராகக் குறைக்கும் விதிமுறையும் இந்த ஆண்டிறுதிக்குள் நடப்புக்கு வரும் என்று கூறப்பட்டது.

நடமாட்ட ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சு ஏற்றுக்கொண்டது.

சென்ற ஆண்டு, தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தில் வெகு வேகமாகச் சென்றது, விதிமுறைக்கு உட்படாத இத்தகைய சாதனத்தை மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தியது ஆகியவற்றுக்காக மூவர் பிடிபட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக இத்தகைய சாதனங்களைச் சாலைகளில் ஓட்டிச் சென்றதற்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்ததாகக் கூறப்பட்டது. 2023ல் அந்த எண்ணிக்கை 4ஆகப் பதிவானது.

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களில் நடமாட முடியாதவருக்காக ஒரே ஓர் இருக்கை மட்டுமே இருக்கும். அவற்றைப்போல் தோற்றமளிக்கும் சாதனங்களில், ஓட்டுபவரின் பின்னே அமர்ந்து செல்பவருக்கான இருக்கையும் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்