சிங்கப்பூரில் உள்ள ஏறக்குறைய 1,800 முழுநேர, பகுதிநேர பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறை ஊழியர்கள், சம்பள உயர்வு, தெளிவான வாழ்க்கைத்தொழில் பாதைகள் ஆகியவற்றின் மூலம் பயனடையவிருக்கின்றனர்.
மனிதவள அமைச்சு, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவை புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட கூட்டுச் செய்தியாளர் அறிக்கையில் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறைக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதில், உரிமம் பெற்ற பூச்சிக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பர்களும் ஊழியர்களும் அடங்குவர்.
அந்தச் சம்பள உயர்வு முறை அமைக்கப்படுவதையும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மேற்பார்வையிட, பூச்சிச் கட்டுப்பாட்டுக்கான முத்தரப்புக் குழுமம் நிறுவப்படுகிறது. அக்குழுவில் தொழில்துறைச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர்.
ஊழியர்களின் திறன்கள், உற்பத்தித்திறன் வேலைச் செயல்திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப முதலாளிகள் சம்பளம் வழங்குவதை உறுதிசெய்வதே நோக்கம்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தில் பங்குதாரர் மேலாண்மை, வாழ்க்கைத்தொழில் சேவைகள், பங்காளித்துவக் குழுவின் இயக்குநராக இருக்கும் வான் ரிசால் அந்த முத்தரப்புக் குழுமத்திற்குத் தலைமை தாங்குவார்.
அத்துடன், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதியும் ‘பார்க்ராயல் கலெக்ஷன் பிக்கரிங்’, ‘பார்க்ராயல் ஆன் பீச் ரோடு’ ஆகியவற்றின் குழுமப் பொது மேலாளருமான கங் தியோங் வா அதன் இணைத் தலைவராகச் செயல்படுவார்.
இந்நிலையில், தெம்பனிஸ் நார்த்தில் உள்ள ‘இகோஸ்பேஸ் பெஸ்ட் மேனெஜ்மென்ட்’ நிறுவனத்திற்குச் சென்றார், மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
அப்போது, பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறை, படிப்படியான சம்பள உயர்வு முறையில் சேர்க்கப்பட்டிருக்கும் 10வது துறையாகும் என்றார் திரு தினேஷ். அந்தத் தொழில்துறையைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முதலாளிகள், ஊழியர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க குறைந்தது ஈராண்டுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறை ஊழியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இத்துறைக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கம் செய்யப்படுவது, இந்த ஊழியர்களின் நிபுணத்துவத்திற்கும் முக்கியத்துவத்திற்குமான ஓர் அங்கீகாரம்,” என்று திரு தினேஷ் கூறினார்.

