கடந்த மாதம் தோ பாயோவில் உள்ள வீவக வீட்டின் 35வது மாடியில் இருந்து மீட்கப்பட்ட ‘அலாஸ்கன் மாலமியூட்’ வகையைச் சேர்ந்த நாய் தற்போது தன்னை தத்தெடுக்க விரும்புவோருக்காக ‘ஆவலுடன்’ காத்திருக்கிறது.
வீட்டின் சமையலறைக்குப் பின்புறம் அமைந்துள்ள மேல்மாடத்தில் மிகவும் ஆபத்தான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த நாய் தேசிய பூங்காக் கழக அதிகாரிகளால் செப்டம்பர் 1ம் தேதி மீட்கப்பட்டது.
‘செயின்டு டாக் அவேர்னெஸ்’ எனும் நாய் ஆர்வலர்கள் அமைப்பு (CDAS), ‘பிட்டா’ என்ற பெயருடைய சுறுசுறுப்பான அந்த செல்லப் பிராணி, பெரியோர்கள் உள்ள குடும்பத்தில் வாழ்வது உகந்தது என்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. ஏனெனில் குழந்தைகள் உள்ள வீடுகளில் பிட்டா எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதைப் பற்றி சந்தேகம் உள்ளது என்றும் அமைப்பு கூறியுள்ளது.
‘மாலமியூட்’ வகை நாய்கள் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவை. அவை 58 முதல் 64 செ.மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியவை. வீவக வீடுகளில் அவற்றை வளர்க்க அனுமதி இல்லை.
பிட்டாவை வளர்க்க விருப்பமுள்ளோர், CDAS அமைப்பின் ஃபேஸ்புக் அல்லது chaineddogawareness.sg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விருப்பங்களை பதிவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் மட்டுமே தொடர்புகொள்ளப்படும்.