சிங்கப்பூரில் கூடுதலானோர் தங்கள் செல்லப்பிராணிகளைக் குடும்ப உறுப்பினர்களைப் போல பார்த்துக்கொள்வதால், விலங்குகளுக்கான மருத்துவச் செலவுகளை மனிதர்களுக்கான சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைப் போல் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலங்குகளுக்கான கட்டணம் அதிகம் கொண்ட மருத்துவப் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் போன்றவை அடிக்கடி வழங்கப்படுவதாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும் காப்பீடு கட்டணம் கூடுகிறது.
2023ஆம் ஆண்டு நாயின் மருத்துவக் கட்டணங்களுக்காக கடன் அட்டைகளிலிருந்து பெறப்பட்ட தொகையை அடைக்க ஒரு தம்பதி மொத்த சேமிப்பையும் பயன்படுத்தியதோடு கழக வீட்டையும் விற்கும் நிலைக்கு ஆளாகினர். அப்படியிருந்தும் அவர்கள் வளர்த்த பிரெஞ்சு புல்டோக் (French Bulldog) ரக செல்லப்பிராணி உயிர் பிழைக்கவில்லை.
செல்லப்பிராணிகளால் ஏற்படக்கூடும் எதிர்பாரா கட்டணங்களைச் சமாளிக்க உரிமையாளர்கள் காப்புறுதிப் பக்கம் திரும்புகின்றனர்.
இன்று இன்கம், ஏஐஏ உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் நாய்களுக்கும் பூனைகளுக்கும் காப்புறுதித் திட்டங்களை வழங்குகின்றன.
பெரும்பாலானவை விலங்குகளுக்கான ஆலோசனை, மருந்து, அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற கட்டணங்களைச் செலுத்த உதவுகின்றன. ஓரிரு காப்புறுதித் திட்டங்கள் மட்டுமே விபத்தில் இறந்த செல்லப்பிராணிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன.
வெகு சில திட்டங்கள் மட்டும் விபத்துகளையும் செல்லப்பிராணிகளால் அடுத்தவர்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ ஏற்படும் சேதங்களையும் சமாளிக்க உதவுகின்றன.
செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதியை வாங்கும்போது அனைத்தையும் உள்ளடக்கும் திட்டங்கள் இல்லை என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியின் இணைப் பேராசிரியர் வெய் பெங்கியு.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் செல்லப்பிராணிகளுக்கு ஒன்பது வயதாகும் வரை கட்டணங்களைக் கட்ட உதவுகின்றன. ஆனால் சில திட்டங்கள் அந்த வயதையும் தாண்டி காப்புறுதி அளிக்கின்றன.
பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் ஒன்பது வயதான செல்லப்பிராணிகளைத் திட்டத்தில் இணைப்பதை நிறுத்துவதால் முன்கூட்டியே அவற்றுக்கான காப்புறுதியை எடுத்துவிடும்படி பேராசிரியர் வெய் அறிவுறுத்துகிறார்.
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை அல்லது சிக்கலான அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு எப்படியும் பல ஆயிரம் வெள்ளி வரை செலவாகும். மனிதர்களைப் போல அவற்றுக்கு மெடிசேவ் கணக்கோ அரசாங்கத் தள்ளுபடியோ கிடையாது.