தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் முறையைச் சீரமைக்க மனு தொடங்கியது சிஜக

2 mins read
18a2cc4e-05d5-448a-92b6-0aace4fd548d
ஞாயிற்றுக்கிழமை (மே 18) நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிஜக தலைவர் பால் தம்பையா, கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை ஒருபக்கம் நகர்த்தி வைத்துள்ள சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக), தனது களப்பணியைத் தொடர்ந்துள்ளது.

தேர்தல் முறைக்கு மாற்றங்களைக் கோரும் மனு ஒன்றை அது தொடங்கியுள்ளது. கட்சித் தொண்டர்களுக்கு நன்றிகூறும் இரவு உணவு விருந்தின்போது கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் ஞாயிற்றுக்கிழமை (மே 18) மனுவைத் தொடங்கிவைத்தார்.

சிங்கப்பூரில் தற்போதைய தேர்தல் முறைக்கு ஆறு மாற்றங்களை இந்த மனு கோருகிறது. பிரசாரம் மேற்கொள்ள குறைந்தபட்சம் மூன்று வாரங்களை ஒதுக்குவது, தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களுக்கும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் இடையே ஆறு மாத இடைவெளி வழங்குவது உள்ளிட்டவை அந்த மாற்றங்களில் அடங்கும்.

2030 பொதுத் தேர்தலை முன்னிட்டு ‘புதுப்பிப்போம், மறுசீரமைப்போம், மீண்டும் எழுப்புவோம்’ எனும் புதிய இயக்கத்தின் ஒரு பகுதியாக கட்சி தொடங்கிய மூன்று முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த மனு விளங்குகிறது.

2025 பொதுத் தேர்தலில் சிஜக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் அது தோல்வியுற்றது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சீ, சமுதாயத்தைப் பாதிக்கும் தேசிய அளவிலான விவகாரங்களைப் புரிந்துகொள்ள வாக்காளர்களுக்கு அண்மைய தேர்தல் போதிய அவகாசம் வழங்கவில்லை என்றார்.

“குறிப்பாக, தேர்தல் நடைமுறையைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொள்ளும் இளம் வாக்காளர்களிடமிருந்து எங்களுக்கு மீண்டும் மீண்டும் கிடைத்துள்ள கருத்து இதுவே,” என்றார் அவர்.

பிரதமர் அலுவலகத்தின்கீழ் இருப்பதிலிருந்து தேர்தல் துறையை நீக்குவது, குழுத்தொகுதி முறையை அகற்றுவது, செய்தித்தாள் மற்றும் அச்சு ஊடகச் சட்டத்தை மறுஆய்வு செய்வது உள்ளிட்டவை மனுவில் முன்மொழியப்பட்டுள்ள இதர மாற்றங்களில் அடங்கும்.

மனுவுக்கு எத்தனை கையொப்பங்களைப் பெற கட்சி விரும்புகிறது, அல்லது இதற்குப் பிறகு அது என்ன செய்யத் திட்டமிடுகிறது போன்ற மேல்விவரங்களை டாக்டர் சீ வழங்கவில்லை.

குறிப்புச் சொற்கள்