வாங்கிய கடனைச் செலுத்தாத ஆடவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

2 mins read
a3a6ce1e-0528-49cd-bbde-328bc27a9e7c
ஜோகூர் பாருவில் உள்ள ஹூ சோங் காங்கின் வீட்டின்முன் கடன் முதலைகள் பெட்ரோல் குண்டு வீசினர். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் 35 வயது ஆடவர் ஒருவரின் குடும்பம், சிங்கப்பூரைச் சேர்ந்த சட்டவிரோதக் கடன்முதலையிடமிருந்து கடன் பெறுவதற்கு விண்ணப்பித்த பின்னர், அவர்களால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது தந்தை ஹூ சோங் காங், 58, தனது மகன் RM95,192 (S$30,000) கடன் வாங்க வற்புறுத்தப்பட்டார் என்றும் ஆனால் பணம் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பின்னர், கடன்முதலைகள் டிசம்பர் 6ஆம் தேதி இஸ்கந்தர் புத்ரி வட்டாரத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி, அவர்களது குடும்பத்தினரை மிரட்ட முயன்றதாக தி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஹூவின் மகன், முன்பு கடன் வாங்குவதற்காக கடன்முதலைகளுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் அந்த ஏற்பாட்டை அவர் தொடரவில்லை.

கடன்முதலைகள் ஆரம்பத்தில் உரிமம் பெற்ற நிதி நிறுவனம் போல் காட்டிக்கொண்டு, அவரது தனிப்பட்ட விவரங்களை வழங்குமாறு வற்புறுத்தினர்.

அவர் RM95,192 (S$30,000) கடன் வாங்க சம்மதித்தார். ஆனால் அந்தத் தொகை அவருக்குக் கிடைக்கவில்லை.

இருப்பினும், கடன்முதலைகள் அவரது வங்கிக் கணக்குக்குப் பணத்தை மாற்றிவிட்டதாகக் கூறிய பிறகு, திரு ஹூவின் மகன் தான் கடனை ரத்து செய்ய விரும்புவதாகச் சென்னார். அதைக் கேட்ட கடன்முதலைகள் கடன் ரத்தை மறுத்து, வட்டியாக S$10,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் S$7,000 கொடுக்காவிட்டால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சும்மா விடப் போவதில்லை என்று அவர்கள் மிரட்டினர்.

பின்னர், டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4.18 மணியளவில் அவர்களின் வீட்டிற்கு வெளியே ஏதோ எரியும் வாடை வந்ததாக ஹூ கூறினார் என்று தி ஸ்டார் செய்தித்தாள் சொன்னது.

இதன் தொடர்பில் திரு ஹூ, தாமான் யுனிவர்சிட்டி காவல் நிலையத்திலும் இஸ்கந்தர் புத்ரி வட்டார நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புப் பிரதிநிதி லியூ சின் டோங்கிடமும் புகார் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்