பெட்ரோல் நிலைய ஊழியர் மரணம்: ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பெட்ரோல் நிலைய ஊழியர் மரணம்: ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

1 mins read
89314ec2-0dbb-41e8-925f-bd0a98b37df6
22 வயது ரே பிங் ஏசெட் மீது செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தது, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

அப்பர் சாங்கி ரோடு நார்த் பகுதியில் உள்ள ‘எஸ்ஸோ’ எரிபொருள் நிலையத்தில், பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்ட வாகனத்தை ஓட்டி, அங்கு பணியாற்றிய ஊழியர் மீது மோதிய 22 வயது ரே பிங் ஏசெட் என்பவருக்கு எதிராகச் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தது, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) அவர் மீது சுமத்தப்பட்டன.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) அதிகாலை 3:55 மணியளவில், 69 வயது பெட்ரோல் நிரப்பும் ஊழியர் காரில் எரிபொருள் நிரப்ப வந்தபோது, காரின் கதவு திறந்திருந்த நிலையிலேயே ஓட்டுநர் திடீரென வாகனத்தைப் பின்னோக்கி இயக்கியுள்ளார். கதவு மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஊழியருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த பெண்ணும் வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில், அன்றைய தினமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்கள் காப்புறுதிப் பாதுகாப்பு இல்லாததால் மற்ற சாலைப் பயனர்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்ஊழியர்போதைப்பொருள்பெட்ரோல் நிலையம்