புதிய மருந்து மூலப்பொருள் ஆலை மூலம் ஃபைசர் $1 பில்லியன் முதலீடு

3 mins read
8d210320-ba74-459c-a806-3fa7e1427a1a
துவாஸ் சவுத் அவென்யூ 6ல் அமைந்துள்ளது ஃபைசரின் புதிய மருந்து மூலப்பொருள் தயாரிப்பு ஆலை. - படம்: சாவ் பாவ்

அமெரிக்காவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், சிங்கப்பூரில் $1 பில்லியன் முதலீட்டில் ஒரு புதிய மருந்து மூலப்பொருள் தயாரிப்பு ஆலையைத் திறந்துள்ளது.

ஜூலை 23ஆம் தேதியன்று, 429,000 சதுர அடி பரப்பளவில் துவாஸ் உயிர்மருத்துவப் பூங்காவில் திறக்கப்பட்ட அந்த ஆலை, மருந்துகளுக்கான மூலச் செயற்கூறை (ஏபிஐ) தயாரிக்கும்.

அந்த மூலச் செயற்கூறு, ஃபைசரின் புற்றுநோய், வலி, நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்தப் புதிய முதலீடு, உயர்தேர்ச்சிமிக்க 250 புதிய வேலைகளை உருவாக்கும் என்று ஃபைசர் கூறியது.

அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ஆலை, 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபைசர் ஆலையின் விரிவாக்கமாக இருக்கும்.

எல்லா இறுதிக்கட்ட செயல்திறன் தகுதி சோதனைகளில் வெற்றிபெற்ற ஆலை, தனது மருந்துகளை வர்த்தக ரீதியில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அங்கீகாரமாகக் கருதப்படும் பசுமைச் சின்ன தங்கச் சான்றிதழை இந்த ஆலை பெற்றுள்ளது. மேலும், 2040க்குள் நிகர கரிம வெளியீடற்ற நிலையை எட்டுவது என்ற ஃபைசரின் இலக்கை அடையவும் இது உதவும்.

“ஆறு கண்டங்களில் பரவியுள்ள நிறுவனத்தின் 30க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளில், இந்த புதிய ஆலை மிக உயர்ந்த தானியங்கி முறையில் இயங்கும் ஒன்றாக இருக்கும்,” என்றார் ஃபைசர் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை விநியோக அதிகாரியும் நிர்வாக துணைத் தலைவருமான மைக் மெக்டெர்மட்.

புதிய ஆலையின் திறப்பு விழாவில் பேசிய திரு மெக்டெர்மட், “இந்த விரிவுபடுத்தப்பட்ட வசதி, நமது ஒட்டுமொத்த உற்பத்தித் தடத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும் திருப்புமுனை மருந்துகளைத் தயாரிக்கும் திறனையும் வலுப்படுத்துகிறது,” என்றார்.

திறப்பு விழாவுக்கு துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.

அந்நிகழ்வில் அவர் பேசும்போது, “ஃபைசரின் முதலீடு, சிங்கப்பூரின் ஆற்றல்மிக்க திறனாளர்களையும் உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான நவீன வசதிகளையும் உலகளாவிய உயிர்மருந்தாக்க நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சான்றாகும்,” என்றார்.

“நாட்டின் உற்பத்தி 2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மேம்பட்ட உற்பத்தியில் சிங்கப்பூரை உலகத் தலைவராக நிலைநிறுத்த விரும்புகிறோம்,” என்று திரு கான் மேலும் சொன்னார்.

உயிர்மருந்தாக்கம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகளை உள்ளடக்கிய உயிர்மருத்துவ அறிவியல் துறை, சிங்கப்பூர் பொருளியலுக்கு முக்கிய பங்களிக்கும் துறையாகும்.

“துவாஸ் உயிர்மருத்துவப் பூங்காவில் ஃபைசரின் அண்மைய முதலீடு சிங்கப்பூர் ஒரு முன்னணி உயிர்மருத்துவ அறிவியல் மையமாக இருப்பதை வலுப்படுத்துகிறது,” என்றார் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜேக்லின் போ.

“சிங்கப்பூருக்கு பயனுள்ள வேலைகள் மற்றும் பொருளியல் வாய்ப்புகளை உருவாக்க, ஃபைசர் நிறுவனத்துடனான எங்கள் நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்,” என்றும் மேலும் கூறினார் திருவாட்டி போ.

கொவிட்-19 கிருமித்தொற்றின்போது சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஃபைசரின் நெருங்கிய பங்காளித்துவத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்தார் துணைப் பிரதமர் கான்.

“சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான தருணங்களில் தடுப்பூசி விநியோகங்களை விரைவுபடுத்துவதற்கான ஒப்பந்தக் கடமைகளைத் தாண்டி ஃபைசர், எங்களின் தடுப்பூசி விகிதங்களை விரைவாக அதிகரிக்கச் செய்தது,” என்றும் திரு கான் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்