பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், ஜூலை 14 முதல் 16 வரை சிங்கப்பூரில் இருப்பார்.
2027ஆம் ஆண்டில் பிலிப்பீன்சிடமிருந்து ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்கவுள்ளது. அதனை முன்னிட்டு, சிங்கப்பூருடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அந்தப் பயணம் அமைகிறது.
அதற்காக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) பிற்பகலில் அதிபர் மார்கோஸ் பிலிப்பீன்சிலிருந்து புறப்பட்டார். புதன்கிழமை (ஜூலை 15) அவர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சிங்கப்பூருக்கு அவர் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இது.
இந்தப் பயணத்தின்போது, இருநாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், சுகாதாரப் பராமரிப்பு, ஆகியவற்றில் கூட்டுமுயற்சிகளை விரிவாக்குவதுப் பற்றிக் கலந்துரையாடுவார்கள் என்று அதிபரின் பேச்சாளர் கிளேர் காஸ்ட்ரோ தெரிவித்தார். அதோடு, வட்டார, உலக மேம்பாடுகள் குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என்றார் அவர்.
“பிலிப்பீன்சுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவை இருநாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து வலுப்படுத்துவார்கள். இதன் மூலம் நமது மக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பல்வேறு வட்டார, உலக விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவும் மேம்படும்,” என்று ஜூலை 13ஆம் தேதி மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

