ரொட்டி சுடுவதற்கான பொருள்களை விற்கும் உள்ளூர் வர்த்தகமான ஃபூன் ஹுவாட், இந்த ஜூன் மாதம் அன்றாடம் பயன்படுத்தப்படும் குறைந்தது 100 அத்தியாவசியப் பொருள்களின் விலையை மாற்றாமல் வைத்துக்கொள்ளவிருக்கிறது.
விலை அதிகரிப்பைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவுவது இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
தீவு முழுவதும் உள்ள அதன் எல்லா ரெட்மேன், ஃபூன் ஹுவாட் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களுக்கான விலையில் மாற்றம் இல்லை. ‘ரெட்மேன் ரிவார்ட்ஸ் லாயல்டி திட்டம்’ எனும் வெகுமதித் திட்டத்தின் உறுப்பினர்களுக்கு இந்தச் சலுகைத் திட்டம் பொருந்தும் என்று ஃபூன் ஹுவாட் தெரிவித்தது.
அத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள கட்டணம் கிடையாது.
மாவு, வெண்ணெய், பால் மாவு உள்ளிட்ட ரொட்டி சுடுவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை ஜூன் மாதத்தில் மாற்றப்படாமல் இருக்கும். ‘நட்டெல்லா’ சாக்லெட், கடலை வகைகள், பாஸ்டா உள்ளிட்டவற்றின் விலையும் மாற்றப்படாது.
விலை மாற்றம் செய்யப்படாத பொருள்களின்மீது அதைத் தெரியப்படுத்தும் குறிப்பு ஒட்டப்பட்டிருக்கும்.
உலகளவில் விநியோகச் சங்கிலிகள் நிலையற்று இருப்பதுடன் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான செலவு 20 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஃபூன் ஹுவாட் கூறியது.

