அரசியல் ஒற்றுமையைப் பாராட்டும் எம்.பி.யின் தம்படம்

அரசியல் ஒற்றுமையைப் பாராட்டும் எம்.பி.யின் தம்படம்

2 mins read
cb4451d0-c439-478b-9199-c12432f3296c
அணிவகுப்பின் போதுதான் திரு சிங், திருவாட்டி லிம் ஆகியோருடன் திருவாட்டி டின் (இடக்கோடி) அந்தத் தம்படத்தை எடுத்தார். - படங்கள்: டின் பெய் லிங் ஃபேஸ்புக்; ஏஷியாஒன்
Google News Preferred Icon

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிங்கப்பூர் அரசியல்வாதிகள் இடம்பெற்ற ஒரு தம்படம், இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மக்கள் செயல் கட்சியின் (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) டின் பெய் லிங், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின்போது, ​​பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், அக்கட்சித் தலைவர் சில்வியா லிம் இருவருடன் எடுத்த ஒரு தம்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய தேசிய விளையாட்டரங்கில், மூவரும் புகைப்படத்திற்காக சிங்கப்பூர் கொடிகளை அசைத்தபடி புன்னகைத்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அவரது ஃபேஸ்புக் பதிவு 3,800க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. அதே சமயம் அவரது இன்ஸ்டகிராம் பதிவு அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,900 விருப்பங்களைப் பெற்றுள்ளது.

மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி டின், அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற அமைச்சரவை உறுப்பினர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில், விளையாட்டரங்கில் மற்ற பெண் அரசியல்வாதிகளுடன் எடுத்த குழு புகைப்படம், சக மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான சியா கியன் பெங், டயானா பாங், கோ பெய் மிங் ஆகியோருடனான புகைப்படங்களும் அடங்கும்.

அணிவகுப்பின் போதுதான் திரு சிங், திருவாட்டி லிம் ஆகியோருடன் திருவாட்டி டின் அந்தத் தம்படத்தை எடுத்தார்.

இந்த மூவரின் தம்படம் இணையவாசிகளிடமிருந்து நேர்மறையான எதிர்வினைகளைப் பெற்றது. சிலர் அவர்களின் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வெளிப்பட்ட ஒற்றுமையைப் பாராட்டினர்.

“ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைத்து விதமான குரல்களையும் அரவணைக்க வேண்டும்,” என்று ஓர் இணையவாசி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சில்வியா லிம்அரசியல்தேசிய தினம் 2026